அன்று கையில்.. இன்று தரையில்.. 2 முறை அபராதம் பெற்றும் அடங்காத திக்வேஷ் ரதி

கொல்கத்தா,

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் விளையாடின. ஈடன் கார்டனில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ரகானே பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 238 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 87 ரன்களும், மிட்செல் மார்ஷ் 81 ரன்களும் அடித்தனர். கொல்கத்தா தரப்பில் ஹர்ஷித் ராணா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 239 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 234 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் லக்னோ 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக ரகானே 61 ரன்கள் அடித்தார். லக்னோ தரப்பில் ஷர்துல் தாகூர் மற்றும் ஆகாஷ் தீப் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இந்த ஆட்டத்தில் லக்னோ சுழற்பந்து வீச்சாளரான திக்வேஷ் ரதி, சுனில் நரைனின் விக்கெட்டை கைப்பற்றினார். அதனை மைதான தரையில் எழுதி வித்தியாசமான முறையில் கொண்டாடினார்.

கடந்த 2 போட்டிகளில் விக்கெட் வீழ்த்தியதை கையில் எழுதுவது போல் வித்தியாசமான முறையில் (நோட் புக் செலிபிரேஷன்) கொண்டாடியதற்காக போட்டி கட்டணத்தில் இருந்து 25 மற்றும் 50 சதவீதம் அபராதம் பெற்றிருந்தார். தற்போது 3-வது முறையாக தரையில் எழுதி கொண்டாடியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.