புதுடெல்லி: இந்தியா- அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் இறுதியானவுடன், நாடு தற்போது உள்ள நிலையைவிட வலுவாக முன்னேறும்’’ என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறியுள்ளார்.
நியாயமான வர்த்தகத்தை உறுதி செய்யும் வகையில் அமெரிக்கா பரஸ்பர வரிவிதிப்பை அமல்படுத்தும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். இது வர்த்தக போரை ஏற்படுத்தியுள்ளது. இந்திய இறக்குமதிக்கு 26 சதவீதம் வரிவிதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கைக்கு பதிலடியாக பல நாடுகளும் வரிவிதிப்பை அதிகரித்துள்ளன. ஆனால், இந்தியா அமெரிக்காவுடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.
இந்நிலையில் பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்திப் சிங் புரி நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள இந்தியா உட்பட அனைத்து நாடுகளுக்கும் பரஸ்பர வரி விதிக்கப்படும் என அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் செயல்படும் இந்திய குழுவினர் , அமெரிக்க நிர்வாகத்துடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இது நிறைவடைந்ததும், ஒவ்வொரு சவால்களையும் வாய்ப்பாக பயன்படுத்தி நாடு தற்போது உள்ள நிலையைவிட வலுவாக முன்னேறும்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தாராளமாக கிடைக்கிறது. 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறது. எரிசக்தி தேவையை நிறைவேற்ற, உள்நாட்டில் உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு ஹர்திப் சிங் புரி தெரிவித்தார்.