இந்தியாவில் உள்ள Dream11, Games24x7 மற்றும் Winzo போன்ற பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேம்களை வழங்கும் நிறுவனங்களை கடுமையாக கண்காணிக்க அரசாங்கம் இப்போது தயாராகி வருகிறது. ஆன்லைன் கேமிங் நிறுவனங்களை, 2002ம் ஆண்டின் PMLA பணமோசடி சட்டத்தின் (Prevention of Money Laundering Act), கீழ் கொண்டுவருவதற்கான செயல்முறையை இறுதி செய்வதில் நிதி அமைச்சகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கண்காணிப்பு தொடர்பான அரசின் விதிகள்
ஆன்லைன் நிறுவனங்கள் இப்போது KYC (Know Your Customer) போன்ற கடுமையான நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டும் மற்றும் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளைக் கண்காணித்து அரசாங்கத்திற்கு புகாரளிக்க வேண்டும் என விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.
அனைத்து தகவல்களும் அரசாங்கத்திற்கு வழங்குவதை கட்டாயப்படுத்தும் விதிகள்
PMLA சட்டத்தின் கீழ், “reporting entity” என்று கருதப்படும் எந்தவொரு நிறுவனமும் அதன் வாடிக்கையாளர்கள் மற்றும் அவர்களின் பரிவர்த்தனைகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள Financial Intelligence Unit-India (FIU-IND) அமைப்புக்கு வழங்க வேண்டும். கூடுதலாக, அவர்கள் வாடிக்கையாளர் அடையாள ஆவணங்கள், கணக்குத் தகவல் மற்றும் வணிகம் தொடர்பான தகவல் தொடர்புகள் போன்ற அனைத்து பதிவுகளையும் பராமரிக்க வேண்டும் போன்ற விதிகள் மத்திய அரசால் வகுக்கப்பட உள்ளன.
ஆன்லைன் கேமிங் செயலிகள் மூலம் கருப்புப் பணம் புழக்கம் குறித்த புகார்
நிதி அமைச்சகத்தின் இந்த் திட்டம் செயல்படுத்தப்பட்டால், குறிப்பாக 2023ம் ஆண்டில் விதிக்கப்பட்ட 28% ஜிஎஸ்டிக்குப் பிறகு, கேமிங் நிறுவனங்கள் மீதான மற்றொரு பெரிய ஒழுங்குமுறை நடவடிக்கையாக இது இருக்கும். ஆன்லைன் கேமிங் செயலிகள் மூலம் அதிக அளவு கருப்புப் பணம் பரிவர்த்தனை செய்யப்படுவதாக அரசாங்கம் சந்தேகிக்கிறது, மேலும் அதை நிறுத்த இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஆன் லைன் கேமிங்கில் கோடிக்கணக்கான மக்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்
2025 ஆம் ஆண்டில் வெளியான FICCI மற்றும் EY ஆகியவற்றின் அறிக்கையில், 2024 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஆன்லைன் கேமிங் நிறுவனங்களின் மொத்த வருவாய் சுமார் $2.7 பில்லியனாக இருந்தது என கூறப்பட்டுள்ளது. மேலும், 2024 ஆம் ஆண்டில், சுமார் 155 மில்லியன் இந்திய பயனர்கள் கற்பனை விளையாட்டுகள், ரம்மி, போக்கர் போன்ற பணம் வைத்து விளையாடும் விளையாடினர் என்றும் இதில் சராசரியாக 110 மில்லியன் மக்கள் தினமும் ஆக்டிவ் ஆக இருந்தனர் எனவும் தரவுகள் கூறுகின்றன.
விதிகளைப் பின்பற்றாமல் இருக்கும் வெளிநாடு நிறுவனங்கள்
இந்திய கேமிங் நிறுவனங்கள் அரசாங்கத்தின் நிபந்தனைகளைப் பின்பற்றத் தயாராக இருப்பதாகக் கூறுகின்றன. ஆனால் வெளிநாட்டு கேமிங் மற்றும் பந்தய செயலிகள் இந்த விதிகளைப் பின்பற்றாமல் இருப்பது கவலை அளிக்கும் விஷயம் ஆகும். வெளிநாட்டு ஆன் லைன் தளங்களில் 25 முதல் 30 பில்லியன் டாலர்கள் வரை புழக்கத்தில் உள்ளது என்றும் தற்போது அரசாங்கத்திற்கு இவற்றின் மீது எந்த கட்டுப்பாடும் இல்லை எனவும் தரவுகள் தெரிவிக்கின்றன.
வலைத்தளத்தைத் தடுப்பது நிரந்தர தீர்வாகாது
கடந்த 2022 முதல் பிப்ரவரி 2025 வரை அரசாங்கம் 1,400க்கும் மேற்பட்ட சட்டவிரோத கேமிங் வலைத்தளங்களைத் தடை செய்துள்ளது மற்றும் 350க்கும் மேற்பட்ட இணைப்புகளை நீக்கியுள்ளது. ஆனால் இந்த தளங்கள் உடனடியாக ஒரு புதிய டொமைனைத் தொடங்குவதால், வலைத்தளத்தைத் தடுப்பது நிரந்தர தீர்வாகாது என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
சில முன்மொழிவுகளில் முரண்பாடு உள்ளதாக கூறும் ஐடி அமைச்சகம்
2023ம் ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் ஆன்லைன் கேமிங்கிற்கான புதிய விதிகளை ஐடி அமைச்சகம் கொண்டு வந்தது. அதில் அதற்கான பிரத்யேக ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்குவது பற்றி பேசப்பட்டது. ஆனால் சில முன்மொழிவுகளில் முரண்பாடு உள்ளதாக கூறி அமைச்சகம் அவற்றை நிராகரித்தது. இதன் விளைவாக, இந்த விதிகள் இன்னும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை மற்றும் “செயல்படுத்த முடியாதவை” என்ற அளவில் உள்ளன.