ஆமதாபாத்தில் இன்று காங்கிரஸ் தேசிய செயற்குழு கூட்டம் – சோனியா, ராகுல் பங்கேற்பு

ஆமதாபாத்,

அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் 2 நாள் நடக்கும் இந்த மாநாட்டில் நாடாளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகள், மாநிலத் தலைவர்கள் என நாடு முழுவதிலும் இருந்து நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

1995 முதல் குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அமர்வு குஜராத்தில் கடைசியாக 1961-ம் ஆண்டு பாவ்நகரில் நடைபெற்றது. அதன் பிறகு 64 ஆண்டுகள் கழித்து மீண்டும் குஜராத்தில் நடைபெற உள்ளது. இதில் சட்டமன்ற தேர்தல்களுக்கு தயாராகும் வகையில் மாவட்ட தலைவர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்களின் சட்டசபைகளுக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாத வாக்கில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல்களை சந்திக்க காங்கிரஸ் கட்சி இப்போதே தயாராகி வருகிறது.

இதையொட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இன்று (புதன்கிழமை) காங்கிரஸ் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் நிறைவேற்றப்பட வேண்டிய முக்கிய தீர்மானங்கள் குறித்து விவாதிக்க காங்கிரஸ் காரிய கமிட்டி மற்றும் மத்திய தேர்தல் குழு கூட்டம் ஆமதாபாத்தில் உள்ள வல்லபாய் பட்டேல் நினைவிடத்தில் நேற்று நடந்தது.

கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மூத்த தலைவர் சோனியா காந்தி, நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், காங்கிரஸ் முதல்-மந்திரிகள் சித்தராமையா (கர்நாடகம்), ரேவந்த் ரெட்டி (தெலுங்கானா), சுக்வீந்தர் சிங் சுகு (இமாசலபிரதேசம்) மற்றும் மூத்த தலைவர்கள், மாநில தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்கு பின்னர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் சச்சின் பைலட் கூறுகையில், அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தல்களை எதிர்கொள்வதற்கான செயல் திட்டங்கள், மாவட்ட தலைவர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க வகை செய்யும் தீர்மானம் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை இறுதி செய்யப்பட்டன. இந்த தீர்மானங்கள் நாளை (அதாவது இன்று) நடைபெறும் தேசிய செயற்குழுவில் நிறைவேற்றப்படும். இதன் மூலம் மாவட்ட அமைப்புகளுக்கு கூடுதல் பொறுப்புகளை வழங்கி கட்சியை பலப்படுத்த முடியும் என்றார்.

கூட்டத்தில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “சர்தார் வல்லபாய் பட்டேல் காங்கிரஸ் கட்சியின் மதிப்பிற்குரிய தலைவராக விளங்கியவர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்தவர். அவரை பா.ஜனதா தங்கள் தலைவர்போல் காட்டிக்கொள்வது நகைப்புக்குரியது.

பாபா சாகேப் அம்பேத்கரை அரசியலமைப்பு சபையில் உறுப்பினராக்குவதில் மகாத்மா காந்தியும் சர்தார் படேலும் முக்கிய பங்கு வகித்தனர். பா.ஜனதா மற்றும் சங்க பரிவார் அமைப்புகள், காந்தியுடன் தொடர்புடைய நிறுவனங்களை கையகப்படுத்தி, அதனை அவரது சித்தாந்த எதிரிகளிடம் ஒப்படைத்து வருகின்றன” என்று கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.