உ.பி.யில் மற்றொரு கொடூரம்: அரசு வேலைக்காக கணவரை கொன்ற காதல் மனைவி

பிஜ்னோர்,

உத்தர பிரதேசத்தின் பிஜ்னோர் மாவட்டத்தில் முக்ராந்த்பூர் கிராமத்தில் வசித்து வந்தவர் தீபக் குமார் (வயது 29). இவர் காதலித்து வந்த ஷிவானி (வயது 27) என்பவரை 2023-ம் ஆண்டு ஜூன் 17-ந்தேதி திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 6 மாத ஆண் குழந்தை உள்ளது. இவர்கள் நஜிபாபாத்தில் வசித்து வந்தனர்.

தீபக் சி.ஆர்.பி.எப்.பில் பணியாற்றி, பின்னர் ரெயில்வேயில் தொழில்நுட்ப பணியாளராக சேர்ந்து வேலை செய்து வந்துள்ளார். சமீபத்தில் வீட்டில் நவராத்திரி கொண்டாட்டத்திற்கான நிகழ்ச்சி ஒன்று நடந்தது.

இதில், கலந்து கொண்ட தீபக் திடீரென மயங்கி விழுந்து உள்ளார். அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டார் என அவருடைய குடும்பத்தினரிடம் ஷிவானி கூறியுள்ளார். அதிர்ச்சி மற்றும் வருத்தம் அடைந்த தீபக்கின் பெற்றோர், உறவினர்கள் இறுதி சடங்கை நடத்த முடிவு செய்தனர்.

எனினும், அரசு ஊழியர் என்பதற்காக தீபக்குக்கு பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என குடும்பத்தினர் வலியுறுத்தினர். இதில், அவருடைய கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்த விவரம் தெரிய வந்தது. உடனடியாக போலீசார் ஷிவானியை கைது செய்து விசாரித்தனர்.

தீபக்கின் அரசு வேலையை பெறுவதற்காக அவரை ஷிவானி கொலை செய்து விட்டார் என தீபக்கின் சகோதரர் மற்றும் தாயார் குற்றச்சாட்டாக தெரிவித்தனர். தீபக்கின் தாயாரை ஷிவானி பல முறை அடித்து, தாக்கியிருக்கிறார். இதனை தீபக்கின் சகோதரரும் உறுதி செய்துள்ளார்.

இந்நிலையில், இந்த கொலையை அவர் தனியாக செய்திருக்க முடியாது என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதற்கு கூட்டாக மற்றொரு நபர் இருக்க கூடும் என்ற அடிப்படையில் வழக்கு பதிவாகி உள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

உத்தர பிரதேசத்தில் மீரட் நகரில் கணவரை, கள்ளக்காதலர் உதவியுடன் கொலை செய்து டிரம் ஒன்றில் மனைவி அடைத்து வைத்த கொடூர சம்பவம் கடந்த மார்ச்சில் தெரிய வந்தது. இந்நிலையில், மற்றொரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.