கர்நாடகாவில் பாட்டில் குடிநீர் தரமற்றது – மந்திரி அளித்த விளக்கத்தால் அதிர்ச்சி

பெங்களூரு,

பெங்களூருவில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சுகாதாரத்துறை மந்திரி தினேஷ் குண்டுராவ், “கர்நாடகத்தில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களில் ரசாயனம் கலந்து இருப்பதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மாநிலம் முழுவதும் 296 குடிநீர் பாட்டில்கள் சேகரிக்கப்பட்டது. அவற்றில் 255 குடிநீர் பாட்டில்கள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது. இதில் 72 குடிநீர் பாட்டில்களில் இருந்த நீர் பாதுகாப்பானது என்று தெரியவந்துள்ளது.

95 குடிநீர் பாட்டில்களில் உள்ள நீர் பாதுகாப்பற்றது என்றும், 88 பாட்டில் நீர் தரம் குறைந்தவை என்றும் தெரியவந்துள்ளது. மீதமுள்ள குடிநீர் பாட்டில்களின் நீர் சோதனை நிலையில் உள்ளது. அந்த 88 பிளாஸ்டிக் பாட்டில்களில் உள்ள நீர் தரமற்ற அபாயகரமானது என்று தெரியவந்துள்ளது. இது ஒரு தீவிரமான விஷயம். அதனால் குடிநீர் பாட்டில்களை வாங்கும்போது பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதாவது பிராண்டு நிறுவனங்களின் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை பயன்படுத்த வேண்டும்.

தரமற்ற குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களுக்கு தரமான பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும் பணியை உணவு பாதுகாப்புத்துறை செய்கிறது. கடந்த மார்ச் மாதம் மருந்துத்துறை அதிகாரிகள் 1,891 மருந்து மாதிரிகளை சேகரித்து ஆய்வு நடத்தினர். இதில் 1,298 மருந்துகள் தரமானவை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 41 மருந்துகள் தரமற்றவை என்று தெரியவந்துள்ளது. தரமற்ற மருந்துகள் விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.