பிரியான்ஷ் ஆர்யா பஞ்சாப் கிங்ஸ் அணியால் 3.9 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார். தொடக்க வீரரான இவர் இத்தொடரில் அனைவரது கவனத்தை ஈர்த்து இருக்கிறார். இந்த தொடரின் குஜராத்துக்கு எதிரான முதல் போட்டியிலேயே அவர் 23 பந்துகளில் 47 ரன்களை அடித்தார். அடுத்த இரண்டு போட்டிகளில் அவர் 8, 0 என ஆட்டமிழந்தார். இருப்பினும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய (ஏப்ரல் 08) போட்டியை பஞ்சாப் அணி வெற்றி பெறுவதற்கு அவரே காரணமாக அமைந்தார்.
சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பிரியான்ஷ் ஆரியாவே காரணம். இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியே முதலில் பேட்டிங் செய்தது. சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள் பஞ்சாப் பேட்டர்களை தனது பந்திற்கு இறையாக்கினர். ஆனால் மறுபக்கம் தாக்குப்பிடித்த பிரியான்ஷ் ஆர்யா பந்தை நாளாபுறமும் பவுண்டரிகளுக்கு சிதறடித்தார். 19 பந்துகளில் அரைசதம் விளாசிய அவர் அடுத்த 20 பந்துகளில் சதத்தை எட்டினார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் வேகமாக சதம் அடித்த 4வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.
இந்த நிலையில், பிரியான்ஷ் ஆர்யாவின் இந்த வளர்ச்சிக்கு இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீரே காரணம் என அவரது தந்தை பவன் ஆர்யா உருக்கமாக பேசி உள்ளார். இது தொடர்பாக பவன் ஆர்யா பேசுகையில், யு19 கிரிக்கெட் போட்டியில் ஒன்றில் பிரியான்ஷ் ஆர்யா 271 ரன்களை விளாசினார். அப்போது முதல் கவுதம் காம்பீர் தான் பிரியான்ஷ் ஆர்யாவுக்கு ஆலோசனை கூறி வருகிறார். அவர் எப்போதும் எவ்வளவு கிரிக்கெட் போட்டிகளை விளையாட முடியுமோ அவ்வளவு போட்டிகளை விளையாட வேண்டும் என்பார்.
டெல்லி பிரீமியர் லீக் தொடரில் பிரியான்ஷ் ஆர்யா விளையாட கம்பீர் தான் அறிவுறுத்தினார். குறிப்பாக அவர் கூறுவது என்னவென்றால், அழுத்தமான சூழல்களில் விளையாட பழக வேண்டும் என்பது தான். அதுதான் பிரியான்ஷ் ஆர்யாவுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது என்று தெரிவித்தார்.
மேலும் படிங்க: உலகின் பணக்கார கிரிக்கெட் லீக்கில் தோனி செய்த மகத்தான சாதனை..!
மேலும் படிங்க: சிஎஸ்கே-வில் இவருக்கு பதில் இவர்.. அடுத்த போட்டியில் வெற்றி நிச்சயம்!