திருப்பதி – காட்பாடி இடையே ரூ.1,332 கோடியில் இரு வழி ரயில் பாதை – மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: திருப்பதி – பகாலா – காட்பாடி இடையேயான 104 கிலோ மீட்டர் ஒரு வழி ரயில் பாதையை, இரு வழி ரயில் பாதையாக மாற்றும் ரூ.1,332 கோடி செலவிலான திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்த மத்திய அரசின் செய்திக் குறிப்பு: திருப்பதி – பகாலா – காட்பாடி இடையேயான 104 கிலோ மீட்டர் ஒரு வழி ரயில் பாதையை, இரு வழி ரயில் பாதையாக மாற்றும் ரூ.1,332 கோடி செலவிலான திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப் பணி மேம்படுத்தப்பட்ட ரயில் பாதைத் திறன் இயக்கத்தை மேம்படுத்தி, இந்திய ரயில்வேக்கு மேம்பட்ட செயல்திறனை வழங்கும். பல்தடத் திட்டமானது செயல்பாடுகளை எளிதாக்கி கூட்ட நெரிசலைக் குறைக்கும். இது ரயில்வேயின் முக்கியப் பிரிவுகளில் மிகவும் தேவையான உள்கட்டமைப்பு வளர்ச்சியை வழங்கும்.

பிரதமர் நரேந்திர மோடியின் புதிய இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப இந்தத் திட்டம் அமைந்துள்ளது. இது, இப்பகுதியில் உள்ள மக்களை விரிவான வளர்ச்சியின் மூலம் “தற்சார்பானவர்களாக” மாற்றும், இது அவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் சுய வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும். ஒருங்கிணைந்த திட்டமிடல் மூலம் சாத்தியமான பன்முக இணைப்புக்கான பிரதமர் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டத்தின் விளைவாக இந்த திட்டம் உருவாகியுள்ளது.

மக்கள், சரக்குகள் மற்றும் சேவைகளின் தடையற்ற போக்குவரத்திற்கும் இது வகை செய்யும். ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களில் உள்ள மூன்று மாவட்டங்களை இணைக்கும் இந்தத் திட்டம், தற்போதுள்ள இந்திய ரயில்வேயின் கட்டமைப்பை சுமார் 113 கி.மீ. அளவுக்கு அதிகரிக்கும். இத்திட்டம், சுமார் 400 கிராமங்களுக்கும், சுமார் 14 லட்சம் மக்களுக்கும் போக்குவரத்தை மேம்படுத்தும்.

நிலக்கரி, வேளாண் பொருட்கள், சிமெண்ட் மற்றும் பிற கனிமங்கள் போன்ற பொருட்களை கொண்டு செல்வதற்கு இது ஒரு முக்கிய வழியாகும். திறன் விரிவாக்கப் பணிகளின் விளைவாக ஆண்டுக்கு 4 மில்லியன் டன்கள் அளவுக்கு கூடுதல் சரக்கு போக்குவரத்து ஏற்படும். சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், எரிசக்தி திறன்மிக்க போக்குவரத்து முறையாகவும் ரயில்வே இருப்பதால், பருவநிலை இலக்குகளை அடைவதற்கும், நாட்டின் சரக்கு போக்குவரத்து செலவைக் குறைப்பதற்கும், எண்ணெய் இறக்குமதி (4 கோடி லிட்டர்) குறைவதற்கும், கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கும் (20 கோடி கிலோ) இது ஒரு கோடி மரங்களை நடுவதற்கு சமமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு வெளியிட்டுள்ள மற்றொரு செய்திக் குறிப்பில்,, “பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலை எண் 7 (ஜிராக்பூர்-பாட்டியாலா) சந்திப்பில் தொடங்கி தேசிய நெடுஞ்சாலை எண் 5 (ஜிராக்பூர்-பர்வானூ) வரையிலான 19.2 கிலோமீட்டர் நீளத்திற்கு 6 வழி ஜிராக்பூர் புறவழிச்சாலை அமைக்கவும், பிரதமரின் விரைவுசக்தி தேசிய பெருந்திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த போக்குவரத்து உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு உதவிடும் நடவடிக்கைகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான மொத்த மூலதன மதிப்பீடு ரூ.1878.31 கோடி” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.