புதுடெல்லி,
நாடு முழுவதும் வக்பு சொத்துக்களை ஒழுங்கு படுத்துதல் மற்றும் நிர்வாகத்தில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வுகாணும் நோக்கில் கடந்த 1995-ம் ஆண்டின் வக்பு சட்டத் தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் மசோதா மற்றும் முசல்மான் வக்பு (ரத்து) மசோதா-2024 ஆகிய இரண்டையும் மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை மந்திரி கிரண் ரிஜிஜு நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தார்.
இதன்படி நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிந்துரைத்த திருத்தங்களுடன் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், திமுக உள்பட இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. வக்பு திருத்த மசோதா மீதான விவாதத்துக்கு 8 மணி நேரம் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் 12 மணி நேரம் வரை நீட்டிக்கப்பட்டது. நள்ளிரவு 2 மணியளவில் இந்த மசோதா வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. டிவிஷன் முறையில் வாக்கெடுப்பு நடந்தது. இதில், மசோதாவுக்கு ஆதரவாக 288 உறுப்பினர்களும், எதிராக 232 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
இதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த 5-ந்தேதி மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார். அதனால் அது சட்ட அந்தஸ்து பெற்றது. இதற்கிடையே, வக்பு திருத்த சட்டம் அரசியல் சாசனப்படி செல்லாது என்று அறிவிக்கக்கோரி, 10-க்கு மேற்பட்ட மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தி.மு.க., அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், ஜாமியத் உலமா ஐ ஹிந்த் உள்ளிட்ட அமைப்புகளும், அரசியல்வாதிகளும் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில், அம்மனுக்கள் தொடர்பாக மத்திய அரசு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் ‘கேவியட்’ மனு தாக்கல் செய்தது. வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீது ஏதேனும் உத்தரவு பிறப்பிப்பதாக இருந்தால், தனது தரப்பு கருத்தை கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி, இந்த மனுவை தாக்கல் செய்தது.
வக்பு திருத்த சட்டங்களுக்கு எதிரான மனுக்கள், 15-ந்தேதி விசாரணைக்கு வரக்கூடும் என்று சில வக்கீல்கள் தெரிவித்தனர். கடந்த 7-ந்தேதி, ஜாமியத் உலமா ஐ ஹிந்த் அமைப்பு தரப்பு மூத்த வக்கீல் கபில் சிபலிடம் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு, 15-ந்தேதி மனுக்களை விசாரணைக்கு பட்டியலிடுவதாக உறுதி அளித்தது.