புதுடெல்லி: சீனப் பயணத்தின்போது வங்கக் கடலை சொந்தம் கொண்டாடும் வகையில் வங்கதேச இடைக்கால அரசின் ஆலோசகர் முகமது யூனுஸ் தெரிவித்த கருத்துக்கு பதிலடியாக, இந்தியாவின் சரக்கு முனையங்களை , வங்கதேசம் பயன்படுத்துவதற்கு வழங்கப்பட்ட அனுமதியை இந்தியா திரும்ப பெற்றது.
வங்கதேச இடைக்கால அரசின் ஆலோசகர் முகமது யூனஸ் சமீபத்தில் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் அளித்த பேட்டியில், ‘இந்தியாவின் 7 வட கிழக்கு மாநிலங்கள் நிலத்தால் சூழப்பட்ட பகுதி. வங்க கடலின் ஒரே பாதுகாவலன் வங்கதேசம்தான். அதனால் அங்கு சீனா முதலீடு செய்ய வேண்டும்’’ என அழைப்பு விடுத்தார். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில் இந்திய சரக்கு முனையம் மற்றும் சுங்க நிலையங்களை பயன்படுத்தி கொள்ள வங்கதேசத்துக்கு கடந்த 2020-ம் ஆண்டு வழங்கப்பட்ட அனுமதியை உடனடியாக திரும்ப பெற்றுக்கொள்வதாக மத்திய நேரடி வரிகள் மற்றும் சுங்க வாரியம் வங்கதேசத்துக்கு கடந்த 8-ம் தேதி கடிதம் அனுப்பியது. மேலும், இந்திய பகுதிக்குள் ஏற்கெனவே நுழைந்த வங்கதேசத்தின் சரக்கு வாகனங்களும் இந்திய பகுதியை விட்டு வெளியேறவும் உத்தரவிடப்பட்டுள்ளது. முகமது யூனுஸ் தெரிவித்த கருத்துக்கு பதிலடியாக இந்தியா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
வங்கதேசம் இதுவரை, பூடான், நேபாளம், மியான்மர் ஆகிய நாடுகளுக்கு இந்திய முனையங்களை பயன்படுத்தி தனது சரக்குகளை எளிதாக ஏற்றுமதி செய்து வந்தது. தற்போது இந்தியாவின் நடவடிக்கையால், வங்கதேசத்தின் ஏற்றுமதி கடுமயைாக பாதிக்கும். கூடுதல் செலவை சந்திக்க நேரிடும். அமெரிக்கா இறக்குமதி வரியை அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு வங்கதேசத்துக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையை இந்திய ஏற்றுமதியாளர்கள் வரவேற்றுள்ளனர். ‘‘டெல்லி விமான நிலைய சரக்கு முனையத்துக்கு, வங்கதேசத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு 20 முதல் 30 சரக்கு லாரிகள் வருகின்றன. இதனால் சரக்கு முனையத்தில் நெரிசல் ஏற்படுவதோடு, சரக்கு கட்டண உயர்வும் ஏற்படுகிறது. இனிமேல் எங்கள் சரக்குகளை அனுப்ப சரக்கு முனையத்தில் அதிக இடம் கிடைக்கும்’’ என அவர்கள் கூறியுள்ளனர்.