வலுக்கும் வரி யுத்தம்: அமெரிக்காவுக்கு வரியை 84% ஆக உயர்த்தி சீனா பதிலடி!

பெய்ஜிங்: அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வரி யுத்தம் வலுத்துள்ளது. சீனா மீதான வரியை 104% ஆக ட்ரம்ப் உயர்த்திய நிலையில், அமெரிக்க பொருட்களுக்கான வரியை சீன அதிபர் ஜி ஜின்பிங் 84% ஆக உயர்த்தி உள்ளார்.

உலக நாடுகளின் பொருட்கள் மீதான பரஸ்பர வரி பட்டியலை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த 2-ம் தேதி வெளியிட்டார். இதில் சீன பொருட்களுக்கான வரி 34% ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதற்கு பதிலடியாக அமெரிக்காவின் அனைத்து பொருட்களுக்கும் 34% வரி விதிக்கப்படும் என சீனா அறிவித்தது.

இதன் தொடர்ச்சியாக, சீன பொருட்களுக்கான வரியை 104% ஆக அமெரிக்கா நேற்று உயர்த்தியது. இதற்கு பதிலடியாக அனைத்து அமெரிக்க பொருட்களுக்கான வரி நாளை (ஏப்.10) முதல் 84% ஆக உயர்த்தப்படும் என சீன நிதியமைச்சகம் இன்று அறிவித்தது. இதன்மூலம் இவ்விரு நாடுகளுக்கிடையிலான வரி யுத்தம் தீவிரமடைந்துள்ளது.

முன்னதாக, குடியரசு கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பேசும்போது, “குடியரசு கட்சியின் சில கிளர்ச்சியாளர்கள், பரஸ்பர வரி தொடர்பாக உலக நாடுகளுடன் நாடாளுமன்ற குழு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கூறுகின்றனர். உங்களுக்கு நான் ஒன்று சொல்கிறேன். என்னைப் போல உங்களால் பேரம் பேச முடியாது.

சில நாடுகள் எந்த அளவுக்கும் பணிந்து செல்ல தயாராக உள்ளன. நீங்கள் என்ன சொன்னாலும் அதை செய்ய தயாராக இருக்கிறோம், வரி தொடர்பாக தயவு செய்து ஒப்பந்தம் செய்து கொள்ள முன்வாருங்கள் என என்னிடம் கெஞ்சுகின்றனர்” என்றார்.

இதனிடையே, “அமெரிக்காவுடனான சீனாவின் வரிவிதிப்புப் போர் தீவிரமடைந்ததால், வேறுபாடுகளை ‘சரியான முறையில்’ நிர்வகிப்பதன் மூலமும், விநியோகச் சங்கிலி உறவுகளை மேம்படுத்துவதன் மூலமும் அண்டை நாடுகளுடனான உறவுகளை சீனா வலுப்படுத்தும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா – சீனா இடையிலான வரி யுத்தத்தின் எதிரொலியாக, சர்வதேச அளவில் பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சி நிலவி வருகிறது. இது, இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.