விமானத்தில் பெண்ணுக்கு திரும்ப, திரும்ப பாலியல் தொந்தரவு அளித்த இந்திய வம்சாவளி நபர்

நியூயார்க்,

அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் உள்ள பெல்கிரேடு நகரில் இருந்து டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகர் நோக்கி அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று பறந்து சென்றது. அப்போது, நடுவானில் விமானத்தில் பயணித்த பெண் ஒருவரிடம் பவிஷ் குமார் தஹியாபாய் சுக்லா என்பவர் பாலியல் சீண்டல் மற்றும் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு உள்ளார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுபற்றி அந்த பெண் தன்னுடைய கணவரிடம் மொபைல் போன் வழியே குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விமானம் தரையிறங்கியதும் அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரித்ததில் நியூ ஜெர்சி நகரை சேர்ந்தவர் என தெரிய வந்தது. அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதுபற்றி எப்.பி.ஐ. அமைப்பின் சிறப்பு அதிகாரி சாத் மெக் நிவேன் கூறும்போது, அந்த பெண்ணை 2 முறை சுக்லா தகாத முறையில் தொட்டிருக்கிறார் என கூறினார். எப்.பி.ஐ. அதிகாரிகளிடம், பாதிக்கப்பட்ட அந்த பெண் கூறும்போது, அந்த நபர் முதலில் தொடைகளை தொட்டார். பின்னர், பின்புறம் மற்றும் முதுகின் கீழ் பகுதியிலும் தொட்டார் என புகாராக கூறியுள்ளார்.

இதேபோன்று விமான நிலைய போலீசார் பதிவு செய்துள்ள புகாரை பற்றி நிவென் கூறும்போது, அந்த பெண் கழிவறைக்கு சென்று விட்டு திரும்பும்போது, அந்த பகுதிகளை சுக்லா அழுத்தி தேய்த்ததுடன், அவருடைய செயலை மறைக்கும் வகையில் கோட் ஒன்றால் மறைத்தபடி அந்தரங்க பகுதியிலும் அழுத்தி தேய்த்துள்ளார் என குற்றச்சாட்டாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்திய வம்சாவளி நபரான அவர் விமானத்தில் பெண்ணுக்கு திரும்ப, திரும்ப பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இந்த பாலியல் குற்றச்சாட்டை மற்றொரு பயணி உறுதிப்படுத்தி உள்ளார் என மெக் நிவென் கூறியுள்ளார். இதுபற்றி சுக்லாவிடம் போலீசார் விசாரித்தபோது, ஆங்கிலத்தில் பேச எனக்கு வராது என கூறியுள்ளார். ஆனால், அந்த பெண்ணிடமும், அவருடைய மகளிடமும் ஆங்கிலத்தில் அவர் பேசியிருக்கிறார் என நிவென் கூறினார்.

நியூ ஜெர்சியில் உள்ள கோர்ட்டு ஒன்றில் அவர் ஆஜர்படுத்தப்பட்டபோது, குஜராத்தி பேசும் ஒருவர் அவருக்கு உதவியாக பணி அமர்த்தப்பட்டார் என கோர்ட்டு ஆவணம் தெரிவிக்கின்றது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.