தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள ஆம்பலாபட்டு பகுதியை சேர்ந்தவர் தீர்க்கரசு (54). விவசாயியான இவர் தனது நிலத்தை கிரயம் செய்து கொடுத்து, திருகுமார் என்பவரிடம் ரூ.7 லட்சம் கடன் வாங்கியுள்ளார். பணம் திருப்பி தரும் போது நிலத்தை மீண்டும் தீர்க்கரசு பெயருக்கு எழுதி தருவதாக, திருகுமார் கூறியிருந்தார். இந்த நிலையில், தீர்க்கரசு வட்டியுடன் பணத்தை, திருகுமாரிடம் திருப்பி கொடுத்து கடனை அடைத்து விட்டு நிலத்தை கேட்ட போது, நிலத்தை தராமல் பிரச்னை செய்து திருகுமார் மிரட்டியுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. இதையடுத்து, தீர்க்கரசு ஐந்து மாதங்களுக்கு முன்பு, திருகுமார் வீட்டில், பெட்ரோல் குண்டு வீசினார். இது தொடர்பாக தீர்க்கரசுவை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் கடந்த 2ம் தேதி இரவு, டூ வீலரில் கடைத்தெருவுக்கு வந்த தீர்க்கரசுவை நான்கு பேர் வெட்டினர். இது குறித்து பாப்பாநாடு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். பாப்பாநாடு இன்ஸ்பெக்டர் பார்த்திபன் முறையாக நடவடிக்கை எடுக்காமல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து கடந்த 3ம் தேதி தீர்க்கரசு உறவினர்கள் மற்றும் ஆம்பலாபட்டு கிராமத்தினர், பாப்பாநாடு போலீஸ் ஸ்டேஷன் முன்பு, குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், திருகுமாரால், தீர்க்கரசின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை. புகார் அளித்த பிறகும் திருகுமார் மிரட்டி வருகிறார். பாப்பாநாடு இன்ஸ்பெக்டர் பார்த்திபன், திருகுமாருக்கு ஆதரவாக இருக்கிறார் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்டவற்றை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து, திருகுமாரின் அண்ணன் சசிகுமார், பெரியப்பா மகன் கலையரசன், சித்தப்பா மகன் முனீஸ்குமார் ஆகியோர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர்.

இந்தநிலையில், வெட்டுப்பட்ட பலத்த காயத்துடன் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தீர்க்கரசு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, கிராம மக்கள், போலீஸ் ஸ்டேஷன் முன்பு, பந்தலிட்டு, பாடை கட்டி, கொலைக்கான முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கூறி ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர். உடற்கூறாய்வு முடிந்த பிறகு உடலை போலீஸ் ஸ்டேஷன் முன்பு வைக்க போவதாகவும் தெரிவித்தனர். தீர்க்கரசுவின் இறுதி சடங்கு போலீஸ் ஸ்டேஷன் முன்பு நடைபெறும் எனவும் காரில் ஸ்பீக்கர் கட்டி கிராமங்கள் முழுவதும் அறிவித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 5 மணி நேரம் வரை போராட்டம் நடைபெற்றது. அத்துடன் தீர்க்கரசு உடலை வாங்க மாட்டோம் எனவும் கூறினர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் எஸ்.பி.ராஜாராம், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், 30 நாட்களுக்கு வருவாய் துறை மூலம், திருக்குமாரால் அபகரிக்கப்பட்ட நிலம் தீர்க்கரசு குடும்பத்தினரிடம் ஒப்படைக்க கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்படும். குற்றவாளியை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. திருகுமாரால் வேறு யாரும் பாதிக்கப்பட்டு இருந்தால் ரகசியமாக தகவல் அளித்தால் அது சார்ந்த விசாரணை செய்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு மக்கள் ஊருக்கு சென்றனர்.