அமராவதி: ஆந்திர தலைநகர் அமராவதி – ஹைதராபாத் இடையே பசுமை வழி விரைவுச் சாலை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
ஆந்திர பிரதேச மறுசீரமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டு, நிலுவையில் இருக்கும் அடிப்படை கட்டுமான திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்து வருகிறது. இதன் அடிப்படையில் ஆந்திர தலைநகர் அமராவதியில் இருந்து தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்துக்கு பசுமை வழி விரைவுச் சாலை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கடந்த பிப்ரவரி 3-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் கோவிந்த் மோகன் தலைமையில் நடைபெற்றது. இதில் 15 துறைகளை சேர்ந்த செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் தேசிய நெடுஞ்சாலை, ரயில்வே பணிகள், விவசாயம், சுரங்கப் பணிகள் உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
இதில் நிலுவையில் உள்ள பணிகளை உடனடியாக செய்திட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அமராவதி-ஹைதராபாத் விரைவுச் சாலைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதேபோல் தெலங்கானாவில் வெளிவட்ட சாலை ஒன்றுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை அமைக்க தகுந்த இடத்தை தேர்வு செய்யும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.