2008 மும்பை தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தானைச் சேர்ந்த தஹாவூர் ராணா அமெரிக்காவில் சிறையில் அடைக்கப் பட்டிருந்தார். தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸுக்கு ஒரு அவசர மனுவை அண்மையில் ராணா அனுப்பினார். இது குறித்து கடந்த 4-ம் தேதி நீதிமன்றம் பரிசீலனை செய்தது. இதனையடுத்து ராணாவின் மனு நிராகரிக்கப்பட்டதாக நீதிமன்றத்தின் இணையதளத்தில் கடந்த திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.
என்ஐஏ மற்றும் உளவு அமைப்பான ‘ரா’ அதிகாரிகள் அடங்கிய குழு அமெரிக்கா சென்றது. அக்குழு ராணாவை இந்தியா அழைத்து வர சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த நடவடிக்கைகள் முடிந்த நிலையில், பாதுகாப்புப் படையினர் அடங்கிய இந்திய குழுவினரிடம் ராணா ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து, இந்திய அதிகாரிகள் ராணாவை சிறப்பு விமானத்தில் அழைத்துக் கொண்டு புறப்பட்டனர்.
இந்த நிலையில், வியாழக்கிழமை (ஏப்.10) தஹாவூர் ராணா இந்தியா அழைத்து வரப்பட்டார். டெல்லி விமான நிலையம் கொண்டு வரப்பட்ட அவரை தேசிய தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். ராணா டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ள நிலையில், நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
அமெரிக்க நீதிமன்றத்தில் இந்தியாவின் வாதங்களை வழிநடத்திய மூத்த வழக்கறிஞர் தயான் கிருஷ்ணன், தற்போது டெல்லியில் ராணா வழக்கை நடத்த உள்ளார். 2012 டெல்லி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் தயான் கிருஷ்ணன் சிறப்பு வழக்கறிஞராக இருந்தவர். சிகாகோவில் ஹெட்லியை விசாரித்த என்ஐஏ குழுவிற்கும் தலைமை தாங்கினார்.
தயான் கிருஷ்ணனுடன் மத்திய உள்துறை அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு அரசு வழக்கறிஞர் நரேந்தர் மானும் இணைந்து பணியாற்ற உள்ளார். அனுபவம் வாய்ந்த குற்றவியல் வழக்கறிஞரான நரேந்திர மான், ஜெயின்-டைரி ஹவாலா வழக்கு, காமன்வெல்த் ஊழல் மற்றும் போஃபர்ஸ் வழக்கு உள்ளிட்ட பல உயர்மட்ட வழக்குகளில் சிபிஐ சார்பில் வாதாடியவர்.
வழக்கின் பின்னணி: 2008 நவ.26-ம் தேதி மும்பை சத்ரபதி ரயில் நிலையம் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் புகுந்த 10 பாகிஸ்தான் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். சுமார் 60 மணி நேரம் நடந்த இந்த துப்பாக்கிச் சண்டையில் வெளிநாட்டினர் உட்பட 166 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்களில் பாகிஸ்தானி-அமெரிக்கரும் லஷ்கர் -இ-தொய்பா தீவிரவாத அமைப்பை சேர்ந்தவருமான டேவிட் ஹெட்லியும் ஒருவர் ஆவார். இவர் அமெரிக்காவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஹெட்லியுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர் பாகிஸ்தானைச் சேர்ந்த தஹாவூர் ராணா (64). 1990-களில் கனடா குடியுரிமை பெற்ற இவர், சிகாகோ நகரில் குடியேறினார். இதனிடையே, மும்பை தாக்குதலை திட்டமிடுவதற்காக மும்பையின் தாஜ் மஹால் ஓட்டலில் சில நாட்கள் தங்கியிருந்து நோட்டமிட்டதாக ராணா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2009-ல் அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட ராணா சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே, ராணாவை நாடு கடத்தக் கோரி இந்தியா சார்பில் அமெரிக்காவின் கீழ் நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த கீழ் நீதிமன்றங்கள் அவரை நாடு கடத்த உத்தரவிட்டன. இந்த உத்தரவை எதிர்த்து ராணா சார்பில் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கடந்த ஜன.21-ல் ராணா மனுவை நிராகரித்தது. அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.
கடந்த பிப்ரவரியில் அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் ட்ரம்பை சந்தித்துப் பேசினார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ட்ரம்ப், தஹாவூர் ராணா இந்தியாவில் விசாரணையை சந்திக்க வேண்டும் என தெரிவித்தார்.
இதனிடையே, உச்ச நீதிமன்றத்தில் ராணா பிப்.27-ல் அவசர மனுத் தாக்கல் செய்தார். அதில், “எனக்கு பார்கின்சன் நோய், சிறுநீர் பை புற்றுநோய் உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளன. மேலும் , பாகிஸ்தானைச் சேர்ந்தவன் என்பதால் இந்தியாவில் என் மீதான விசாரணை நியாயமாக இருக்காது. எனவே, என்னை நாடுகடத்தக் கூடாது” என கூறியிருந்தார். இந்த மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் நிராகரித்துவிட்டது.இதன் பிறகுதான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸுக்கு மீண்டும் ஒரு அவசர மனுவை அனுப்பினார்.
யார் இந்த ராணா? – பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் பிறந்த ராணா, அந்நாட்டு ராணுவத்தில் மருத்துவராக பணியாற்றினார். 1997-ல் அதிலிருந்து விலகி, மனைவியுடன் கனடாவில் குடியேறினார். இருவருக்கும் 2001-ல் கனடா குடியுரிமை கிடைத்தது. பின்னர் சிகாகோவில் குடியேறிய அவர், குடியுரிமை சேவை நிறுவனத்தை தொடங்கினார்.
தனது சிறுவயது நண்பரான டேவிட் ஹெட்லியுடன் இணைந்து தீவிரவாத செயலில் ஈடுபடத் தொடங்கினார். இதன் ஒரு பகுதியாக ராணா மும்பையில் தங்கி, தாக்குதலுக்கு நோட்டமிட்டதாக கூறப்படுகிறது. நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கார்ட்டூன் வெளியிட்ட டென்மார்க்கின் நாளிதழ் அலுவலகம் மீது தாக்குதல் நடத்த ராணா திட்டமிட்டிருந்தார். ஆனால் அது முறியடிக்கப்பட்டது.