பெங்களூரு,
பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா டவுன் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ். இவரது மனைவி நேத்ராவதி (வயது 30). இந்த தம்பதிக்கு கடந்த 13 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்திருந்தது. 8 வயதில் ஒரு மகன் இருக்கிறான். டிரைவரான ரமேஷ் லாரி ஓட்டி வருகிறார்.
திருமணமான புதிதில் தம்பதி சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்தார்கள். ஆனால் கடந்த 2 ஆண்டாக அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டு வந்தது. லாரி டிரைவர் என்பதால், வாரத்தில் 2 அல்லது 3 நாட்கள் ரமேஷ் வெளியே தங்கி வந்துள்ளார். அதே நேரத்தில் சமீப காலமாக இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ வெளியிடுவதில் நேத்ராவதி ஆர்வம் காட்டி வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக நேத்ராவதி திடீரென்று காணாமல் போய் விட்டார். அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதற்கிடையில், நேற்று முன்தினம் நெலமங்களா டவுனில் நேத்ராவதி சந்தோஷ் என்ற வாலிபரரை திருமண செய்து கொண்ட வீடியோ மற்றும் திருமண கோலத்தில் நேத்ராவதி-சந்தோஷ் இருக்கும் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியானது. இதை பார்த்து நேத்ராவதியின் கணவர் ரமேஷ் அதிர்ச்சியில் உறைந்தார்.
இன்ஸ்டாகிராமில் ஒரு வாரத்திற்கு முன்பாக தான் நேத்ராவதிக்கு சந்தோஷ் அறிமுகம் ஆகியுள்ளார். பார்த்த நிமிடமே இருவருக்கும் ஒருவரையொருவர் பிடித்துள்ளது. இந்த பழக்கம் காதலாக மாறி உள்ளது. இதனால் நேத்ராவதி, காதலனுடன் சேர்ந்து வாழ திட்டமிட்டார். அதன்படி கணவர் மற்றும் 8 வயது மகனை தவிக்கவிட்டுவிட்டு சந்தோசுடன் ஓடிப்போய் நேத்ராவதி திருமணம் செய்து கொண்டார்.
இதுதொடர்பாக ரமேஷ் அளித்த புகாரின் பேரில் நேத்ராவதி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.