Sanju Samson News Tamil : ஐபிஎல் 2025 தொடரின் 23வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இப்போட்டியில் குஜராத் அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அத்துடன் ஐபிஎல் 2025 புள்ளிப் பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது. அதேபோல் தோல்வியை தழுவிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் 7வது இடத்தில் இருக்கிறது. பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் ஆர்ஆர் அணி எஞ்சியிருக்கும் 9 போட்டிகளில் கட்டாயம் 6 போட்டிகளில் வென்றாக வேண்டும். குறைந்தபட்சம் 5 போட்டிகளிலாவது வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது.
இந்த சூழலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு இரண்டு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. முதல் தவறு என்னவென்றால் இப்போட்டியில் டாஸ் வெற்றி பெற்று பேட்டிங் ஆடாமல் பவுலிங்கை தேர்வு செய்தார். ஒருவேளை பேட்டிங் ஆடியிருந்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் வலுவான பந்துவீச்சு இருப்பதால் வெற்றி பெற்றிருக்க வாய்ப்பு இருந்தது. இதை செய்யாமல் பலவீனமான பேட்டிங்கை வைத்துக் கொண்டு சஞ்சு சாம்சன் ஏன் சேஸிங் செய்ய நினைத்தார் என தெரியவில்லை. அதேநேரத்தில் 200 ரன்களுக்குள் குஜராத் அணியை கட்டுப்படுத்தியிருந்தால் கூட ஆர்ஆர் அணி வெற்றி பெற்றிருக்க வாய்ப்பு இருந்தது. அதனையும் சஞ்சு சாம்சன் கேப்டனாக பிளான் போட தவறிவிட்டார்.
அடுத்தது, இப்போட்டியில் அதிகநேரம் பந்துவீசியதற்காக சஞ்சு சாம்சனுக்கு 24 லட்சம் ரூபாய் அபராதம் விதித்திருக்கிறது ஐபிஎல் நிர்வாகம். ஏற்கனவே ரியான் பராக் கேப்டனாக இருந்தபோது 12 லட்சம் ரூபாய் அவருக்கு இதே தவறுக்காக அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. இனியும் இந்த தவறு நடந்தால் ஒரு போட்டியில் விளையாட சஞ்சு சாம்சனுக்கு தடை விதிக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் குஜராத் டைடன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் தோல்வியை தழுவிய அதேநேரத்தில் தன்னுடைய ஊதியத்தில் அபராதத்தையும் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
மேலும், இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சிறப்பாக விளையாடவில்லை என்றால் அவருடைய கேப்டன்சியும் பறிக்க அந்த அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருப்பதால் சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாட வேண்டிய நெருக்கடியில் இருப்பதுடன் அணியையும் சிறப்பாக வழிநடத்த வேண்டிய இக்கட்டான சூழலில் இருக்கிறார். இந்த ஆபத்தில் இருந்து சஞ்சு சாம்சன் தப்பிப்பாரா? என்பது இப்போதைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.