தமிழக பாஜக தலைவர் : இவர்களுக்கு வாய்ப்பில்லையா? அறிவிக்கப்பட்ட கட்சி தேர்தல் விதிகள் சொல்வதென்ன?

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், பா.ஜ.க மாநில தலைவர் பதவிக்கான தேர்தல் குறித்த பேச்சுக்கள் பரபரப்பாக இருக்கிறது. அண்ணாமலையும் இந்த விவகாரத்தில், புதிய மாநிலத் தலைவருக்கான போட்டியில் நான் இல்லை. பா.ஜ.க-வில் தலைவர் பதவிக்குப் போட்டி எல்லாம் இல்லை. எல்லோரும் சேர்ந்து ஏக மனதுடன் ஒருவரைத் தலைவராகத் தேர்வு செய்வார்கள்” என்று கூறிவருகிறார்.

அண்ணாமலை, நயினார் நாகேந்திரன்
அண்ணாமலை, நயினார் நாகேந்திரன்

மறுபக்கம், தலைவர் பதவிக்கான ரேஸில் பா.ஜ.க எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் பெயரும் அடிபடுகிறது. இவையனைத்துக்கும் மேல், பா.ஜ.க-வைச் சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று சென்னை வருகை தருகிறார்.

இத்தகைய சூழலில், மாநில தலைவர் பதவிக்குப் போட்டியிடுபவர்கள் தகுதிக்கான விதிமுறைகளை மாநில பா.ஜ.க வெளியிட்டிருப்பது அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் மத்தியில் விவாதப் பொருளாகியிருக்கிறது.

மாநில தலைவர் பதவி – விதிமுறைகள்

எக்ஸ் தளத்தில், மாநில பா.ஜ.க வெளியிட்டிருக்கும் அந்த அறிக்கையில், “மாநிலத் தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான விருப்பமனுக்களைக் கட்சியின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். போட்டியிட விருப்பமுள்ளவர்கள் நாளை (ஏப்ரல் 11) மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை, விருப்ப மனுக்களை மாநில தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

பாஜக அறிக்கை
பாஜக அறிக்கை

மூன்று பருவம் (ஒரு பருவம் என்பது 3 வருடங்கள் என்று சொல்லப்படுகிறது) தீவிர உறுப்பினராகவும் மற்றும் குறைந்தது 10 வருடங்கள் அடிப்படை உறுப்பினராகவும் உள்ளவர் மாநில தலைவர் பதவிக்குப் போட்டியிடத் தகுதி பெறுவார். இவரைக் கட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் 10 பேர் அவரிடமிருந்து எழுத்துப்பூர்வமான ஒப்புதல் பெற்றுப் பரிந்துரைக்க வேண்டும்.

தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவிக்குத் தேர்தலைப் பொறுத்தவரையில், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஒருவர் முன்மொழிய மற்றொரு மாநில பொதுக்குழு உறுப்பினர் வழி மொழிய வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தலைவர் பதவிக்கான தேர்தல் விதிமுறைகளில், கட்சியின் அடிப்படை உறுப்பினராகக் குறைந்தது 10 வருடங்கள் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருப்பதால், அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் ஆகியோர் போட்டியிடுவதில் சிக்கல் என்று பேச்சுக்கள் பரவிவருகிறது. இருப்பினும், இந்த விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவரப்படலாம் என்று தகவல்கள் பரவுகிறது.

அதேசமயம், பா.ஜ.க மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் பி. செல்வம் இந்த அறிக்கையை எக்ஸ் தளத்தில் ஷேர் செய்து, ” மாநில தலைவர் பதவிக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் உண்மை விசுவாசிகள், தொண்டர்கள் எவராயினும் அறிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உள்பட்டு தலைவர் பதவிக்குப் போட்டியிடலாம். இதுவே மக்களாட்சி ஜனநாயகம். நீங்கள் அரசியல் தலைவர்களின் வாரிசுகளாக இருக்க வேண்டியதில்லை. ஒரே குடும்பம் தலைவர் பதவியைக் கட்டி வைத்துக் கொள்வதும் இல்லை” என்று பதிவிட்டிருக்கிறார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.