விழுப்புரம்: பாமகவில் உட்கட்சி பூசல் நிலவிவரும் நிலையில், திண்டிவனத்தில் அன்புமணிக்கு ஆதரவாக பாமகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திண்டிவனத்தில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லம் முன்பு இன்று பிற்பகல் பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் திண்டிவனம் நகரச் செயலாளர் ராஜேஷ் என்பவர் தலைமையில் 33 பேர் ராமதாஸ் தன்னை அக்கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவராகவும் , அன்புமணி ராமதாஸை செயல் தலைவராக அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மீண்டும் அன்புமணி ராமதாஸையே தலைவராக அறிவிக்ககோரியும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அப்போது விழுப்புரம் பாமக கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயராஜ் தலைமையில் வந்த பாமகவினர் நீங்கள் எதற்காக ஆர்பாட்டம் செய்கிறீர்கள் என கேட்டதால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இத்தகவல் அறிந்த திண்டிவனம் போலீஸார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதால் கலைந்து சென்றனர்.
இந்நிலையில், முன்னாள் நகரச் செயலாளர் ராஜேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பாட்டாளி மக்கள் கட்சியின் நிரந்தர தலைவர் அன்புமணி ராமதாஸ் மட்டும் தான். ராமதாஸின் சொல்லை நாங்கள் கேட்டுப்போம். ஆனால் இந்த விஷயத்தில் அவரின் வயது முதிர்வை பயன்படுத்தி சிலர் பின் இருந்து இயக்கி தேவையில்லாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இளைஞர்களின் நிலைப்பாடு, நிரந்தர தலைவர் என்றுமே அன்புமணி மட்டும்தான். வேறு யாரையும் நாங்கள் தலைவராக ஏற்றுக் கொள்ள மாட்டோம். தனிப்பட்ட சில சுயநலவாதிகளினுடைய சூழ்ச்சிதான் இது. வேறு ஒன்றுமே இல்லை. என்றைக்குமே அன்புமணி தான் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர்.” என்றார்.