திருவாரூர்: `ஒரு வீட்டுக்கு ரூ.2000'- மின் இணைப்பு வழங்க லஞ்சமா?- மக்கள் குற்றச்சாட்டும் விளக்கமும்!

ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் நிலையில், தேரோட்டம் நடக்கும் போது நான்கு வீதிகளிலும் அதாவது கீழ வீதி, மேலவீதி, வடக்கு வீதி, தெற்கு வீதி ஆகிய வீதிகளில் மின்தடை செய்யப்படும். இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு எரிசக்தி துறை மானிய கோரிக்கையின் போது மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திருவாரூர் தியாகராஜர் திருக்கோவில் தேரோடும் வீதிகளில் மேலே செல்லும் மின் கம்பிகள் புதைவட கம்பிகளாக மாற்றம் செய்யப்படும் என அறிவிப்பு வெளியிட்டார். அதைத் தொடர்ந்து கடந்த மூன்று ஆண்டுகளாக மந்தகதியில் பணிகள் நடைபெற்று வருகின்றன. உயரழுத்த மின்கம்பிகள் ரூ.2.5 கோடி மதிப்பிலும், குறைந்த அழுத்த மின்கம்பிகள் ரூ.4 கோடி மதிப்பிலும் என ரூ.6.5 கோடி மதிப்பில் டெண்டர் விடப்பட்டது.

இந்நிலையில் தற்போது வீடுகளுக்கு பூமிக்கடியில் இருந்து மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு ஒவ்வொரு வீட்டுக்கும் மின் இணைப்புகள் கொடுக்கப்படும் போது அங்கு வேலை செய்யும் பணியாளர்கள் ஓர் இணைப்பிற்கு 1500 முதல் 2000 ரூபாய் வரை குடியிருப்பு வாசிகளிடம் வசூலிப்பதாக, புகார்கள் வரிசை கட்டுகின்றன. அவ்வாறு பணம் கொடுத்தால் மட்டுமே மின்சார இணைப்பு கொடுக்க முடியும் என மிரட்டி பொதுமக்களிடம் பண வசூலில் ஈடுபட்டு வருகின்றனராம்.

இது குறித்து பெயர் சொல்ல விரும்பாத குடியிருப்புவாசி ஒருவரிடம் விசாரித்தோம், “வருஷா வருஷம் திருவாரூர்’ல தேரோடுறது சந்தோஷமா இருந்தாலும், தேரோட்டத்து அன்னக்கி இந்த நாலு வீதியில உள்ள குழந்த குட்டி வச்சிருக்க மக்கள் படுற அவஸ்தையை சொல்ல முடியாது! தேரு வருது’ன்னு நைட்டோட நைட்டா கரண்ட்ட கட் பண்ணி விட்டுடுவாங்க. இதுக்கு எப்ப தான் நல்ல காலம் பொறக்க போகுது’ன்னு நெனைச்சிட்டு இருந்தப்ப தான், கொஞ்ச நாளைக்கி முன்னாடி நாலு வீதி மக்களுக்கு இலவசமா அண்டர் கிரவுண்ட்ல ஈபி கனெக்சன் கொடுக்குறோம்’னு வேலையை ஆரம்பிச்சாங்க.

ஆனா இப்போ காண்ட்ராக்ட் எடுத்த ஆளுங்க ரோட்ட தோண்டி கனெக்ஷன் கொடுக்க பைப் வாங்கனும், கிளாம்பு வாங்கணும்’னு அது இதுன்னு காரணம் காட்டி 2000 வரையிலும் பணம் வாங்கிட்டு இருக்காங்க. கேக்குற காச நாங்க தர மறுத்தா உங்க வீட்டுக்கு அத பண்ணுவோம் இத பண்ணுவோம்’னு சொல்லி மிரட்டுறாங்க. எங்களுக்கு என்ன பண்றது ஏது பண்றது’ன்னு தெரியாம கேக்குற காச கொடுத்துட்டு அமைதியா இருக்கோம். ஒவ்வொரு வீட்டுக்கும் 2000 கொடுத்தா சுத்துப்பட்டு உள்ள வீட்டுக்கு எவ்வளோ வரும்..? இதுக்கெல்லாம் அரசாங்கம் தான் நல்ல முடிவா சொல்லணும்” என்று கூறினார்.

இதுகுறித்து மின்வாரிய இணை இயக்குநர் ஆனந்த்திடம் விசாரித்தோம். “நான்கு வீதிகளைச் சுற்றி அமைந்துள்ள வீடுகள், வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள் உட்பட மொத்தம் 1161 புதைவட மின் இணைப்புகள் அமைக்க ஈரோடு வக்மா இன்ஃப்ரா யுஎஸ்ஏ நிறுவனம் ஒப்பந்தம் பெற்றுள்ளது. இதில் 843 எண்ணிக்கை முழுமை பெற்றுள்ளது. மீதமுள்ள பணிகள் விரைந்து நடைபெறும்” என்று கூறினார்.

`மின் இணைப்பு பெற வீடுகளில் ஒப்பந்தக்காரர்கள் லஞ்சம் வாங்குகிறார்களே..?’ என்று நாம் கேட்ட கேள்விக்கு, “அது சார்ந்து எனது கவனத்திற்கு வரவில்லை… நீங்கள் செயற்பொறியாளர் அவர்களிடம் கேளுங்களேன்” என்று கூறினார்.

தொடர்ந்து மின்வாரிய செயற்பொறியாளர் செந்தமிழ் செல்வியிடம் விசாரித்தோம். “மின் இணைப்பு பெற பொதுமக்களிடம் ஒப்பந்தக்காரர்கள் லஞ்சம் பெறுவது தொடர்பான தகவல் எனது கவனத்திற்கு வரவில்லை. வரும் பட்சத்தில் துரித நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

அதிகாரிகள் இந்தப் புகார் தொடர்பாக விசாரித்து, துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.