வாஷிங்டன்,
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்றதுமுதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, பரஸ்பர வரிவிதிப்பு என்ற பெயரில் இந்தியா, சீனா, உள்பட பல்வேறு நாடுகளுக்கு கூடுதலாக வரி விதித்துள்ளார். இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 27 சதவீத வரி விதித்துள்ளார்.
அதேபோல், சீனப் பொருட்களுக்கு முன்னர் விதிக்கப்பட்டிருந்த 10 சதவீத வரிகளை மார்ச் மாத துவக்கத்தில் 20 சதவீதமாக டிரம்ப் உயர்த்தினார். அமெரிக்காவிற்குள் பென்டானில்(Fentanyl) உள்ளிட்ட வீரியமிக்க போதை மருந்துகள் கடத்தப்படுவதைத் தடுக்க சீனா போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டி இந்த நடவடிக்கையை அவர் மேற்கொண்டார்.
அதன்பின்னர், பரஸ்பர வரிவிதிப்பு என்ற வகையில் கடந்த வாரம் 34 சதவீத கூடுதல் வரியை விதித்தார். இதன்மூலம் சீன பொருட்கள் மீதான இறக்குமதி வரியானது 54 சதவீதமாக உயர்ந்தது. அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலடியாக சீனாவும் 34 சதவீத கூடுதல் வரி விதிப்பதாக அறிவித்தது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த டிரம்ப், சீன இறக்குமதிக்கு கூடுதலாக 50 சதவீத வரி விதித்தார். இதன் மூலம் சீனாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் மொத்த வரி 104 சதவீதமாக அதிகரித்தது. இந்த வரிவிதிப்பு நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது. இதனால், உலக அளவில் பெரும் வர்த்தகப்போர் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சீன இறக்குமதிகள் மீதான வரிகள் 125 சதவீதம் உயர்த்தப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
உலக சந்தைகளுக்கு சீனா காட்டிய மரியாதையின்மையின் அடிப்படையில், அமெரிக்காவால் சீனாவுக்கு விதிக்கப்படும் வரியை 125 சதவீதமாக உயர்த்துகிறேன், இது உடனடியாக அமலுக்கு வருகிறது. எதிர்காலத்தில், அமெரிக்கா மற்றும் பிற நாடுகளை கிழித்தெறியும் நாட்கள் இனி நிலையானவை அல்ல என்பதை சீனா உணரும் என்று நம்புகிறேன்.
மாறாக, வர்த்தகம், வர்த்தக தடைகள், கட்டணங்கள், நாணய கையாளுதல் மற்றும் நாணயமற்ற கட்டணங்கள் தொடர்பான விவாதிக்கப்படும் பாடங்களுக்கு தீர்வு காண 75 க்கும் மேற்பட்ட நாடுகள் அமெரிக்க பிரதிநிதிகளை அழைத்துள்ளன. மேலும் இந்த நாடுகள் எனது வலுவான ஆலோசனையின் பேரில், அமெரிக்காவிற்கு எதிராக எந்த வகையிலும், வடிவத்திலும் பழிவாங்கவில்லை என்பதன் அடிப்படையில், 90 நாள் இடைநிறுத்தத்தை நான் அங்கீகரித்துள்ளேன்.
மேலும் இந்தக் காலகட்டத்தில் கணிசமாகக் குறைக்கப்பட்ட 10 சதவீத பரஸ்பர கட்டணமும் உடனடியாக அமலுக்கு வருகிறது. இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.