புதுடெல்லி: “மும்பை தாக்குதல் தீவிரவாதிக்கு முந்தைய யுபிஏ அரசு பிரியாணி வழங்கியது, பிரதமர் மோடி அவர் கூறியது போல தீவிரவாதியை நீதியின் முன் நிறுத்துகிறார்.” என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடியுள்ளார். தஹாவூர் ராணா இன்று இந்தியாவுக்கு கொண்டுவரப்படும் நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், “காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் மும்பை தாஜ் ஹோட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில் பல அப்பாவிகள் கொல்லப்பட்டனர். குற்றவாளிகளுக்கு எதிராக காங்கிரஸ் அரசு எதுவும் செய்யவில்லை. மாறாக, அவர்கள் அஜ்மல் கசாப்புக்கு பிரியாணி வழங்கினர். ஆனால், குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவது பிரதமர் மோடியின் உறுதிகளில் ஒன்று. மும்பை மக்கள் மோடிக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள்.
அதேபோல், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ் கட்சியை விட சமாதான அரசியலில் ஈடுபட்டுள்ளது. இண்டியா கூட்டணியால் சமாதான அரசியலைத் தாண்டி சிந்திக்க முடியாது. அவர்களிடம் பிரதமர் மோடியைப் போல நேர்மறை சிந்தனை இல்லை.” என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவிடம் ஒப்படைப்பு: முன்னதாக, மும்பை தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தான் தீவிரவாதி தஹாவூர் ராணா, தான் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிராக தாக்கல் செய்திருந்த மனுக்களை அமெரிக்க உச்ச நீதிமன்றம் நிராகரித்த நிலையில், அவர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். அமெரிக்காவில் இருந்து இந்தியா கொண்டுவரப்படும் அவர் இன்று டெல்லி வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு மத்திய அமைப்புகளைச் சேர்ந்த குழு ராணாவை பாதுகாப்புடன் அழைத்துச் செல்லும். பின்பு தேசிய புலனாய்வு முகமை அவரிடம் விசாரணை நடத்தும் என்று தகவல் அறிந்தவர்கள் தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் கூறுகையில், ராணா விசாரணைக்காக மும்பைக்கு அழைத்துச் செல்லப்படலாம். அங்கு அவரிடம் பைகுல்லா சிறையில் உள்ள சொத்துக்கள் பிரிவு அலுவலகத்திலோ, மும்பை காவல்துறை அலுவலகத்தில் உள்ள யூனிட் 1 அலுவலகத்திலோ வைத்து விசாரணை நடத்தப்படலாம். பின்பு, ஆர்தர் சாலை சிறையில் உள்ள பராக் எண் 12ம் அறையில் அடைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை தாக்குதல் தீவிரவாதியான அஜ்மல் கசாப் வழக்கு விசாரணையின் போதும், தூக்கு தண்டனையின் போதும் இந்த அறையில் தான் சிறை வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.