தென்காசி: சுகாதாரத்துறை அமைச்சர் நிகழ்ச்சிக்கு கட்டாய பணம் வசூலா? – ஆடியோவால் கிளம்பிய சர்ச்சை!

தென்காசி மாவட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் நிகழ்ச்சிக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாக மருத்துவர் பேசுவது போன்ற ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதை மறுத்துள்ள மாவட்ட சுகாதார அலுவலகம், ஆடியோ விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக கூறியுள்ளது. தென்காசி மாவட்டம், இலத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வருகிற ஏப்ரல் 11-ம் தேதி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அரசு விழா நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

இந்தநிலையில், இந்த நிகழ்ச்சிக்காக மாவட்ட மருத்துவ வட்டாரத்தில் கட்டாயப்படுத்தி பணம் வசூலிக்கப்படுவதாக வட்டார மருத்துவ அலுவலர் ஒருவர் மூத்த மருத்துவருக்கு பேசுவது போன்ற குரல் பதிவு ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த குரல் பதிவில், ‘அமைச்சர் நிகழ்ச்சிக்கு ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்தும் ரூ.10 ஆயிரம் வேண்டும் என்று சுகாதார துணை இயக்குநர் அலுவலகத்தில் கேட்கின்றனர். இந்த தொகையை எப்படி கொடுக்க முடியும் என்று கேட்டால் புதிதாக பணி நியமனம் பெற்றவர்களிடம் வாங்க சொல்கிறார்கள். பணம் வாங்காமல் கவுன்சலிங் மூலம் இடமாறுதல் வழங்குவதால் அதை சுட்டிக்காட்டி பணம் கேட்க சொல்கிறார்கள். அவர்களிடம் எப்படி பணம் கேட்க முடியும்? ஏன் வேலை பார்க்கிறோம் என்ற மன அழுத்தம் ஏற்படுகிறது. அமைச்சர் நிகழ்ச்சிக்கு ஒவ்வொரு ஒன்றியத்தில் இருந்தும் 100 பேரை அழைத்து வரச்சொல்கிறார்கள்.

அன்றைய தினம் குலதெய்வம் கோயிலுக்கு செல்ல பலர் விடுமுறை கேட்கிறார்கள். வருடம் முழுவதும் விடுமுறையின்றி வேலை பார்ப்பவர்களை எப்படி கட்டாயப்படுத்தி விழாவுக்கு அழைத்து வர முடியும்?. இது அமைச்சருக்கு தெரியுமா என்று தெரியவில்லை?. வி.எச்.என். ஆயா வேலை பார்ப்பவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் சம்பளம் வழங்குவதற்கு கூட மாவட்ட சுகாதார அலுவலகத்தில் பணமில்லை. இந்தநிலையில் இவர்கள் கட்டாயப்படுத்தி பணம் வசூலிக்க சொல்வது மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வகையில் குரல் பதிவு ஆடியோ உள்ளது.

வட்டார மருத்துவ அலுவலரின் இந்த குரல் பதிவு, சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து தென்காசி மாவட்ட சுகாதார அலுவலர் கோவிந்தனிடம் கேட்டபோது, ”அமைச்சர் நிகழ்ச்சிக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து பணம் எதுவும் கேட்கவில்லை. தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த வட்டார மருத்துவர்கள் யாரும் அந்த ஆடியோ குரல் பதிவை வெளியிடவில்லை. ஆடியோ விவகாரம் தொடர்பாக விசாரித்து வருகிறோம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.