புதுடெல்லி: மும்பை தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தான் தீவிரவாதி தஹாவூர் ராணா டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ள நிலையில், நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீதிமன்றத்தின் முன்பு துணை ராணுவப்படையினர் மற்றும் டெல்லி போலீஸார் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் நீதிமன்றத்துக்கு வரும் பார்வையாளர்கள் முழு சோதனைக்கு பின்பே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
ராணா தொடர்பான விவகாரத்தை என்ஐஏ நீதிபதி விசாரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, தஹாவூர் ராணாவை உயர் பாதுகாப்பு கொண்ட சிறையில் அடைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருப்பதாகவும் திகார் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பிறந்த ராணா, அந்நாட்டு ராணுவத்தில் மருத்துவராக பணியாற்றினார். 1997-ல் அதிலிருந்து விலகி, மனைவியுடன் கனடாவில் குடியேறினார். இருவருக்கும் 2001-ல் கனடா குடியுரிமை கிடைத்தது. பின்னர் சிகாகோவில் குடியேறிய அவர், குடியுரிமை சேவை நிறுவனத்தை தொடங்கினார்.
தனது சிறுவயது நண்பரான டேவிட் ஹெட்லியுடன் இணைந்து தீவிரவாத செயலில் ஈடுபடத் தொடங்கினார். இதன் ஒரு பகுதியாக ராணா மும்பையில் தங்கி, தாக்குதலுக்கு நோட்டமிட்டதாக கூறப்படுகிறது. நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கார்ட்டூன் வெளியிட்ட டென்மார்க்கின் நாளிதழ் அலுவலகம் மீது தாக்குதல் நடத்த ராணா திட்டமிட்டிருந்தார். ஆனால் அது முறியடிக்கப்பட்டது.
கூடுதல் தகவலுக்கு வாசிக்க > மும்பை தாக்குதல் தீவிரவாதி ராணாவை இந்தியாவிடம் ஒப்படைத்தது அமெரிக்கா!