புதுச்சேரி: பிஆர்டிசி ஒப்பந்த ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக புதுச்சேரியில் 2வது நாளாக அரசு பஸ்கள் ஓடவில்லை. நிரந்தரம் செய்யாவிட்டால் போராட்டம் தொடரும் என சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுவை சாலை போக்குவரத்து கழகத்தில் ( பிஆர்டிசி), 40 டவுன் பஸ்கள் உட்பட மொத்தம் 96 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து கழக விதிப்படி ஒரு பஸ்ஸுக்கு டிரைவர், கண்டக்டர், மெக்கானிக் மற்றும் நிர்வாக ஊழியர்கள் என மொத்தம் 7 பேர் இருக்க வேண்டும். இந்த நிலையில் நிரந்தர ஊழியர்கள் பெரும்பாலானோர் பணி ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், இருக்கிற சொற்ப ஊழியர்களில் பலரும் அரசியல் செல்வாக்கில் அயல் பணியில் உள்ளனர்.
தற்போது ஒப்பந்த தொழிலாளர்களை கொண்டு குறைந்த அளவில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஒப்பந்த ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். பல கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியும் ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இதனால் பிஆர்டிசி ஒப்பந்த ஊழியர்கள் நேற்று (ஏப்.9) முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். இன்று 2வது நாளாக போராட்டத்தை தொடர்ந்தனர்.

இதனால் பிஆர்டிசி மூலம் நகரம், கிராமப்புற பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்கள் இயக்கப்படவில்லை. நிரந்தர ஊழியர்கள் மூலம் சில பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டது. இதனால் கிராமப்புற மக்கள் அவதியடைந்தனர். இந்த நிலையில் பிஆர்டிசிக்கு புதிதாக 75 பஸ்கள் வாங்கி, புதிய வழித்தடங்களில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதையொட்டி கூடுதல் டிரைவர், கண்டக்டர்கள் தேவை உள்ளதால், பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை நியமிக்க நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
சுயேச்சை எம்.எல்.ஏ.நேரு எச்சரிக்கை: வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்களைச் சந்தித்த பின்பு முதல்வர் ரங்கசாமி ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுவை மாநில சாலை போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களாக 10 ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 250-க்கும் மேற்பட்டவர்கள் சொற்ப ஊதியத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் இரவு, பகல் பாராமல் பணி செய்து கொண்டு வருகிறார்கள்.இவர்கள் பணிநிரந்தரம் கேட்டு பல முறை போராடியுள்ளனர்.
நியாயமான கோரிக்கைகளை நிர்வாகம் ஏற்காமல் அலட்சியப்படுத்துகிறது. இதனால் ஊழியர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் அவர்களை பழிவாங்கும் விதமாக ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிகளுக்கு புதியதாக ஒப்பந்த ஊழியர்களை நியமிக்க அறிவிப்பாணை வெளியிட்டுள்ளனர். 10 ஆண்டு பணிபுரியும் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்த பிறகு புதியதாக ஊழியர்களை நியமிக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கையில் இறங்க வேண்டும். இதையும் மீறி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அலட்சியத்துடன் செயல்பட்டால் ஊழியர்களின் நியாயமான போராட்டத்தை பொதுநல அமைப்புகளுடன் முன்னின்று நடத்துவோம்.” என்று தெரிவித்துள்ளார்.