ரஜினி நடிப்பில் 1999-ம் ஆண்டு வெளியான `படையப்பா’ திரைப்படம் இன்று வரை பல கமர்ஷியல் திரைப்படங்களுக்கும் பென்ச் மார்க். கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியிருந்த இந்த `படையப்பா’தான் ரஜினியின் 150-வது திரைப்படம். இத்திரைப்படம் வெளியாகி இன்றுடன் 26 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது.
இந்தப் படத்தின் நீளம் முதலில் அதிகமாக இருந்ததால் படத்திற்கு இரண்டு இடைவேளைக் காட்சிகளை விடுவதற்கு திட்டமிட்டிருக்கிறார்கள். அதன் பிறகுதான் இந்த முடிவை மாற்றியிருக்கிறார்கள்.

இந்த முடிவு குறித்து முன்பு விகடனுக்கு அளித்த பேட்டியில் பேசிய கே.எஸ். ரவிக்குமார், “ இந்தப் படத்திற்கு முதலில் இரண்டு இடைவேளை விடலாம் என ரஜினி சார் சொன்னார். இந்தப் படத்தை முதலில் நீளமாக எடுத்துவிட்டோம்.
அப்போது வெளியான சில இந்தி திரைப்படங்களை உதாரணமாகச் சொல்லி இரண்டு இடைவேளை விடலாம் என ரஜினி சார் என்னிடம் கூறினார்.
அதன் பிறகு மறுநாள் காலையிலேயே எனக்கு அழைத்து `நேற்று கமலிடம் பேசினேன். பைத்தியமா உனக்கு, இரண்டு இடைவேளை எப்படிவிட முடியும்’ எனக் கேட்டார்.’ என என்னிடம் கூறினார். அதன் பிறகு படத்தை என் முடிவிற்கு விட்டுவிட்டார்கள். பிறகொரு நாள் ரஜினி சாரை படம் பார்க்க அழைத்தேன். அப்போது ரம்யா கிருஷ்ணனும் வந்தார்.
ரஜினி சாரின் நண்பர்களும் வந்திருந்தார்கள். படம் முடித்தப் பிறகு அருணாச்சலம் கெஸ்ட் ஹவுஸ் போகலாம். அங்கு இரவு உணவைச் சாப்பிடலாம் என படம் தொடங்குவதற்கு முன்பு ரஜினி சார் என்னிடம் சொன்னார்.

ஆனால், படம் முடிந்த பிறகு எதுவும் பேசாமல் கிளம்பி சென்றுவிட்டார். அதனால் அவருக்கு பிடிக்கவில்லையோ என நான் நினைத்தேன். அடுத்த நாள் என்னை அழைத்து `எனக்கு படம் மிகவும் பிடித்திருக்கிறது. எதையும் கட் செய்ய வேண்டாம். நேற்று என்னுடைய நண்பர்கள் இருந்தார்கள்.
நீங்கள் இருந்தால் அவர்கள் நேர்மையாகப் படத்தைப் பற்றிச் சொல்லமாட்டார் என நான் சென்றுவிட்டேன்’ எனக் கூறினார். அப்போது நாங்கள் பார்த்த பதிப்புதான் இப்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது.” எனக் கூறியிருக்கிறார்.
படையப்பா படத்தில் உங்களுக்குப் பிடித்த காட்சி எது என கமென்ட்டில் தெரிவியுங்கள்