அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி, அஜித் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது.
எந்தப் படமாக இருந்தாலும் முதல் நாள் முதல் காட்சிக் கொண்டாட்டம் பெரும்பாலும் ஆண்களுக்கானதாகவே இருக்கும்.

இந்நிலையில் ஈரோடு மற்றும் திருப்பூரில் ‘sri sakthi cinemas’ என்ற திரையரங்கம் முதன் முறையாகப் பெண்களை வரவேற்று, ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியைத்(FDFS) திரையிட்டிருக்கிறது.
இந்த முன்னெடுப்பைப் பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.
இதுதொடர்பாக ‘sri sakthi cinemas’ திரையரங்கத்தின் மேனேஜர் ஜானைத் தொடர்புக் கொண்டு பேசினோம். ” பொதுவா பெரிய படங்களின் முதல் நாள் முதல் காட்சியைப் ஆண்கள்தான் கொண்டாடுவாங்க. பெண்களுக்கு அதற்கான ஸ்பேஸ் இருக்குறதுக்கான வாய்ப்பு குறைவு. அதனால தான் பெண்களுக்கு மட்டும் முதல் நாள் முதல் காட்சியைத் திரையிடணும்-னு நினைச்சோம். இப்போதைக்கு ஈரோடு, திருப்பூரில் இந்த முதல் நாள் முதல் காட்சியைத் திரையிட்டிருக்கிறோம்” என்றார்.
இதனைத்தொடர்ந்து திரையரங்கத்தின் உரிமையாளர் கார்த்திகேயனிடமும் பேசினோம். ” ஈரோடு, திருப்பூர், தாராபுரம், பொள்ளாச்சி-னு மொத்தம் 6 இடத்துல தியேட்டர் வச்சிருக்கோம். பெரியப் படங்களின் முதல் நாள் முதல் காட்சிக்கு டிக்கெட் கிடைக்குறது கஷ்டம். இதுனால பெண்கள் பெரும்பாலும் இந்த முதல் நாள் முதல் காட்சியைப் பார்க்க வாய்ப்பு இல்லாமப்போகுது.
ஆண்கள் கொண்டாடுற மாதிரி பெண்களும் ஒரு படத்தைக் கொண்டாடணும்னுதான், பெண்களுக்கான இந்த முதல் நாள் முதல் காட்சியைத் திரையிடத் திட்டமிட்டோம். நாங்க அறிவித்த ஒரு மணி நேரத்தில் அத்தனை டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துருச்சு. இனி வரும் நிறையப் படங்களின் முதல் நாள் முதல் காட்சியைப் பெண்களுக்கு மட்டும் திரையிட இருக்கிறோம். காலையில நான் தியேட்டருக்கு வந்து பார்க்கும்போது எல்லாரும் ரொம்ப உற்சாகமா இருந்தாங்க.

இப்படி ஒரு விஷயத்தை ஏற்படுத்தி கொடுத்ததுக்கு நன்றினு சொன்னாங்க. அதை கேட்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது. இப்போதைக்கு ஈரோடு, திருப்பூர்-ல மட்டும்தான் திரையிட்டோம். இனி எங்களுடைய எல்லா தியேட்டர்லையும் பெண்களுக்கான முதல் நாள் முதல் காட்சியைத் திரையிடுவோம்” என்று நெகிழ்ச்சியாகப் பேசினார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…