ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. இந்தப் படத்தில் த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, சிம்ரன், பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அண்மையில் வெளியான இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், கோலாகலமான கொண்டாட்டத்துடன் ரசிகர்கள் இந்தப் படத்தை வரவேற்று வருகின்றனர்.

இந்த நிலையில், இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் அர்ஜுன் தாஸ் தன் எக்ஸ் பக்கத்தில், “இன்னும் சில மணிநேரங்கள் தான் இருக்கிறது. எனக்கு பதற்றமாக, உற்சாகமாக, ஆர்வமாக என நிறைய உணர்வுகளுடன் காத்திருக்கிறேன். D’ONE நிறுவனத்தில் அஜித் சாரின் படங்களுக்கான மார்க்கெட்டிங் & விளம்பரங்களுடன் நான் தொடங்கியபோது, அவருடன் நடிப்பேன் என ஒருபோதும் நினைத்ததில்லை.
ஆனால் பல வருடங்களுக்குப் பிறகு, அது இறுதியாக நடந்திருக்கிறது. D’ONE-ல், நாங்கள் இரவு முழுவதும் விழித்திருந்து, அதிகாலையில் தியேட்டருக்குச் சென்று, பார்வையாளர்களின் வரவேற்பைக் கவனித்தது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. இன்று முதல் அதே D’ONE பையனாக அதை மீண்டும் செய்வேன். ஒரே வித்தியாசம் என்னவென்றால், நான் அஜித் சாருடன் ஸ்கிரீனில் வரும்போது உங்களின் நேரடி ரியாக்ஷனைப் பார்க்க முடியும்.

என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி அஜித் சார். இது உங்கள் மீதான முழுமையான மரியாதை. உங்களுடன் பணிபுரியும் ஒவ்வொரு நாளையும், உங்கள் கருணை, உங்கள் தாராள மனப்பான்மை, உங்களுடனான உரையாடல்கள், நகைச்சுவைகள், உங்களுடனான டிரைவ், நீங்கள் கொடுத்த ஆலோசனைகள் என எல்லாவற்றையும் கொண்டாட்டத்துடன் மதித்து, எப்போதும் போற்றுவேன்.
இதற்கு முன்பும் சொல்லியிருக்கிறேன், இப்போதும் சொல்கிறேன் – இப்போது நான் நடித்திருப்பது உங்களால், உங்களுக்காக. மீண்டும் உங்களுடன் இணைந்து பணியாற்ற முடியும் என்றும் நம்புகிறேன்.

அஜித் சாரின் ரசிகர்களுக்கு – உங்கள் அனைவரின் அன்பிற்கும், மரியாதைக்கும் மிக்க நன்றி. நான் உண்மையிலேயே உங்களுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். குட் பேட் அக்லி படத்தைப் பார்த்து நீங்கள் அனைவரும் ஒரு முழுமையான கொண்டாட்டத்தைப் பெறுவீர்கள் என்று நம்புகிறேன்.
ஆதிக் சார் உங்களுக்கும் என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றியும், வாழ்த்துகளும். உங்கள் வாக்குறுதியை மறந்துவிடாதீர்கள்…” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.