பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெற்ற (ஏப்ரல் 10) ஐபிஎல் போட்டியில், டெல்லி கேபிட்டல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்.சி.பி-யை வீழ்த்தி, இந்த சீசனில் இன்னும் தோல்வியைக் காணாத அணியாக தனது வெற்றிநடையைத் தொடர்ந்திருக்கிறது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்களை மட்டுமே குவித்தது.

பின்னர் களமிறங்கிய டெல்லி அணி, 18 ஓவர்களிலேயே 4 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. டெல்லியின் இந்த வெற்றிக்கு, பெங்களூருவை அதன் சொந்த மண்ணில் சைலன்ட் ஆக்கிய மூன்று பேர் தான் முக்கிய காரணம்.
பெங்களூரு அணிக்கு ஓப்பனிங்கே அமர்க்களமாக அமைந்தது. ஸ்டார்க் வீசிய மூன்றாவது ஓவரில் மட்டும் பிலிப் சால்ட்டின் அதிரடியால் 30 ரன்கள் வந்தது. 3 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 53 ரன்களைக் குவித்தது ஆர்.சி.பி. அவ்வளவுதான், சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று வானவேடிக்கை இருக்கிறது என்று ஆர்ப்பரித்த பெங்களூரு ரசிகர்களுக்கு அடுத்த ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அக்சர் படேல் வீசிய நான்காவது ஓவரின் 5-வது பந்தை அடித்த சால்ட், கோலியுடனான மிஸ் அண்டர்ஸ்டேண்டில் விப்ராஜ் நிகாமால் ரன் அவுட் செய்யப்பட்டார்.

பெங்களுருவின் சரிவும் இங்குதான் தொடங்கியது. அதோடு நிற்காத விப்ராஜ் நிகாம், தான் வீசிய 7-வது ஓவரில் கடைசி பந்தில் கோலியையும் அவுட்டாக்கினார். அதையடுத்து 18-வது ஓவரில் குருணால் பாண்டியாவின் விக்கெட்டையும் வீழ்த்தினார். இந்தப் போட்டியில் நான்கு ஓவர்களை முழுமையாக வீசிய விப்ராஜ் நிகாம் 4.5 எக்கனாமியில் வெறும் 18 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பிலிப் சால்ட்டின் விக்கெட்டில் விழுந்த பெங்களூரு அணியால் 18-வது ஓவர் வரை எழ முடியவேயில்லை. முதல் 3 ஓவர்களில் 53 ரன்களை அடித்த ஆர்.சி.பி அணி அடுத்த 15 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 74 ரன்களை மட்டுமே குவித்தது. இதில், மிடில் ஓவர்களில் அபாரமாக பந்துவீசிய குல்தீப் யாதவ், பெங்களூரு கேப்டன் ரஜத் பட்டிதார், ஜிதேஷ் சர்மா ஆகியோரை விக்கெட் எடுத்தார்.

மொத்தமாக 4 ஓவர்களில் 4.2 எக்கனாமியில் 17 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மிடில் ஓவர்களில் பெங்களுருவின் சறுக்கலுக்கு விப்ராஜும், குல்தீப்பும் முக்கியமாக காரணமாக அமைந்தனர். இந்தப் போட்டியில், பெங்களூரு அணி 36 பந்துகளை ரன் எதுவும் அடிக்காமல் டாட் பால் ஆக்கி மரம் நாடும் சேவையை சிறப்பாக செய்தது.
வெறும் 163 ரன்களைக் குவித்தபோதும் ஆர்.சி.பி அணி தனது பவுலிங்கை சிறப்பாகத் தொடங்கியது. பவர்பிளேயில் டு பிளெஸ்ஸிஸ் விக்கெட்டை யஷ் தயாளும், ஃப்ரேஸர் மெக்கர்க், அபிஷேக் போரல் விக்கெட்டுகளை புவனேஷ்வர் குமாரும் வீழ்த்த 6 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 39 ரன்களை மட்டுமே டெல்லி குவித்தது. 9-வது ஓவரில் சுயாஷ் சர்மா பந்தில் கேப்டன் அக்சர் படேலும் பெவிலியன் திரும்பினார்.

அந்த நேரத்தில்தான், கே.எல்.ராகுலும், ட்ரிஸ்டியன் ஸ்டேப்ஸும் கைகோர்த்து நிதானமா ஆடினர். ரொம்ப மெதுவாக ஆடிய இந்த ஜோடி 14 ஓவர்கள் முடிவில் 99 ரன்களை மட்டுமே குவித்தது. கே.எல்.ராகுல் 39 பந்துகளில் 51 ரன்கள் அடித்து களத்தில் நின்றுகொண்டிருந்தார். அடுத்த ஆறு ஓவர்களில் டெல்லியின் வெற்றிக்கு 65 ரன்கள் தேவை. மழை வேறு லேசாக தூரத் தொடங்கியது.
மழையால் ஆட்டம் ரத்தானால் டிஎல்எஸ் முறையில் பெங்களூருவுக்கே வெற்றி வாய்ப்பு சாதகமாக இருந்தது. இந்த சமயத்தில்தான் பொறுத்தது போதும் என பேட்டை சுழற்றத் தொடங்கினார் ராகுல். ஹேசல்வுட் வீசிய 15-வது ஓவரில் பவுண்டரியும் சிக்ஸருமாக தனியாளாக 22 ரன்கள் குவித்து டிஎல்எஸ் ஆபத்திலிருந்து அணியைக் காப்பாற்றினார்.

அடுத்த இரண்டு ஓவர்களை ஸ்டப்ஸ் பார்த்துக்கொள்ள, 18-வது ஓவரின் கடைசி 4 பந்துகளில் 16 ரன்கள் அடித்து குறிப்பாக வின்னிங் ஷாட் சிக்ஸ் அடித்து தனது மண்ணில் டெல்லிக்கு வெற்றியைப் பரிசளித்தார். ராகுல் – ஸ்டப்ஸ் கூஒட்டணி 5-வது விக்கெட்டுக்கு 111 ரன்கள் குவித்தது. 93 ரன்களுடன் நாட் அவுட் பேட்ஸ்மேனாக ஜொலித்த ராகுல் ஆட்டநாயகன் விருது வென்றார். டெல்லி அணியும் தொடர்ச்சியாக நான்காவது வெற்றியைப் பதிவுசெய்து தோல்வியே காணாமல் வெற்றிநடை போடுகிறது.