சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் போட்டி சேப்பாக்கத்தில் நடக்கவிருக்கிறது. இந்நிலையில், காயம் காரணமாக சென்னை அணியின் கேப்டம் ருத்துராஜ் நடப்பு சீசனிலிருந்து விலகியிருக்கிறார். அவருக்குப் பதில் தோனியே எஞ்சியிருக்கும் போட்டிகளில் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், ருத்துராஜ் கெய்க்வாட் ரசிகர்களுக்கு மெசேஜ் சொல்லும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
‘ருத்துராஜ் மெசேஜ்!’
அதில் ருத்துராஜ் கெய்க்வாட் பேசியிருப்பதாவது, ‘எதிர்பாராத விதமாக முழங்கையில் ஏற்பட்ட காயத்தால் எஞ்சியிருக்கும் போட்டிகளில் ஆட முடியாத நிலையில் இருக்கிறேன். அது வருத்தம்தான். இதுவரையிலான உங்களின் ஆதரவுக்கு நன்றி. ஆம், நாம் ஆடியிருக்கும் போட்டிகளில் தடுமாற்றமாகத்தான் செயல்பட்டிருக்கிறோம்.

ஆனால், இப்போது ஒரு இளம் விக்கெட் கீப்பர் நம்மை வழிநடத்தவிருக்கிறார். எல்லாம் மாறும் என நம்புவோம். அணியை இந்தச் சூழலிலிருந்து கட்டாயம் மீட்க வேண்டுமென நினைத்தேன். ஆனால், சில விஷயங்கள் நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லையே. டக்அவுட்டிலிருந்து அணிக்கு சப்போர்ட் செய்ய ஆவலாக காத்திருக்கிறேன்.’ என்றார்.