அதிமுகவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் நிழலாகவும், நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளராகவும் இருந்தவர் சந்திரசேகர். வேலுமணிக்கு எல்லாமாக அவர் இருந்தாலும் கடந்த சில ஆண்டுகளாகவே அவர்களுக்குள் பனிப்போர் நிலவி வந்தது. அது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வந்த நிலையில், சந்திரசேகர் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதற்காக அவர் வெளியிட்ட பத்திரிகை செய்தியில், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் புகைப்படங்கள் தான் இடம்பெற்றுள்ளன. வேலுமணியின் படம் இடம்பெறவில்லை. அதை கவனித்தாலே பிரச்னை புரிந்துவிடும்.
என்ன நடந்தது அதிமுக வட்டாரங்களில் விசாரித்தோம். “வேலுமணிக்கும், சந்திரசேகர் தந்தை ராஜனுக்கும் தான் ஆரம்பத்தில் பழக்கம். இதன் தொடர்ச்சியாக வேலுமணியுடன் சந்திரசேகர் நெருங்கி பழகியுள்ளார். குறுகிய காலத்திலேயே வேலுமணியின் நம்பிக்கைக்குரிய தம்பியாக மாறினார். சந்திரசேகருக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டன.

நிழல் அமைச்சர்
அதிமுக ஆட்சியில் நிழல் அமைச்சராக பவர்புல்லாக வலம் வந்தார். உள்ளாட்சித்துறை டெண்டர் தொடங்கி, அதிமுகவின் அதிகாரபூர்வ நாளிதழான நமது அம்மா வரை பல்வேறு பொறுப்புகள் வழங்கப்பட்டன. வேலுமணியின் ரிமோட் கன்ட்ரோலாகவே செயல்பட்டதால் வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகளிலும் இவரும் சிக்கினார்.
சந்திரசேகர் தற்போது கட்சியில் இருந்து விலகினாலும் அதிமுக ஆட்சியில் இருக்கும்போதே பிரச்னைகள் தொடங்கிவிட்டன. டெண்டர், வைட்டமின் ‘ப’ கையாளுதல் ஆகியவற்றில் மனக்கசப்பு ஏற்பட்டது. வேலுமணி அவர் மீது வருத்தமடைந்தார். தான் வளர்த்துவிட்டவரே இப்படி செய்துவிட்டார் என்று கட்சியில் அவருக்கான முக்கியத்துவத்தை குறைக்க தொடங்கினார்.

நிறைவேறவில்லை
2021 சட்டமன்ற தேர்தலில் சந்திரசேகர் கோவை வடக்கு தொகுதியை குறிவைத்து வேலை செய்தார். அப்போது அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. 2022 உள்ளாட்சி தேர்தலில் சந்திரசேகர் மனைவி ஷர்மிளாவை கோவை மாநகராட்சி அதிமுக மேயர் வேட்பாளராக அறிவிப்பார்கள் என்று எதிர்பார்தார். அதுவும் நடக்கவில்லை. 2024 நாடாளுமன்ற தேர்தலில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தார். அதுவும் நிறைவேறவில்லை.
நீண்ட காலமாக கட்சியில் இருப்பதால் மாநில செயலாளர் பதவிக்கு சந்திரசேகர் காய் நகர்த்தினார். வேலுமணியால் அதுவும் நிறைவேறவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்திரசேகருக்கு எம்ஜிஆர் இளைஞரணி மாநில இணை செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இது சந்திரசேகரின் அப்செட்டை அதிகமாக்கியது. இதனால் சந்திரசேகரும் கட்சி வேலைகளை செய்யாமல் அடக்கி வாசித்தார். சந்திரசேகர் குடியிருக்கும் கோவை வடவள்ளி அதிமுக வலுவாக இருக்கும் பகுதியாகும்.

அங்கு கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சொற்ப வாக்குகளை தான் வாங்கியது. பல பூத்களில் ஒற்றை, இரட்டை இலக்க வாக்குகளை வாங்கியது. இது வேலுமணியின் கோபத்தை அதிகரிக்க செய்தது. கட்சி மேடைகளில் கிளை கழக செயலாளர் வரை அனைவரின் பெயர்களையும் வாசிக்கும் வேலுமணி சந்திரசேகரின் பெயரை திட்டமிட்டு புறக்கணித்தார். வேலுமணியின் மகன் விஜய் விகாஸ் திருமண நிகழ்விலும் சந்திரசேகருக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை.
மகன் திருமணத்தையொட்டி நடந்த கறி விருந்து நிகழ்ச்சியிலும் சந்திரசேகருக்கு அழைப்பு இல்லை. இதனால் அவர் விரக்தியின் உச்சத்தில் இருந்தார். 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுகவில் கோவை வடக்கு தொகுதி, வடவள்ளி பகுதிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதிலும் சந்திரசேகர் கைக்காட்டிய ஆள்களுக்கு பதவி போடவில்லை.

அதனால் இனிமேலும் இங்கிருந்தால் மரியாதை இல்லை என்று சென்னை சென்று தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அமித் ஷா – எடப்பாடி சந்திப்பு நேரத்தில் வேலுமணிக்கு இப்படி ஒரு அதிர்ச்சி தகவல் வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அவரை சமாதானப்படுத்த வேலுமணி தரப்பில் முயற்சிகளும் செய்யப்பட்டன. ஆனால் சந்திரசேகர் தன் முடிவில் உறுதியாக இருந்துவிட்டார்.
இது யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம் என்று போக போக தெரியும். சந்திரசேகர் தன்னுடைய அறிக்கையில், ‘தனிப்பட்ட காரணங்களுக்காக கட்சியில் இருந்து வெளியேறுகிறேன்.’ என்று குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமிக்கும், வேலுமணிக்கும் நன்றி சொல்லியுள்ளார்.

இது சம்பிரதாயத்துக்கு சொல்லப்பட்ட நன்றி. கோவையில் உண்மையான அரசியல் பரபரப்பு இனி தான் தொடங்க போகிறது. இதுவரை வேலுமணிக்கு நிழலாக இருந்த சந்திரசேகர், விரைவில் மாற்றுக் கட்சியில் இணைந்து அவருக்கு எதிராகவே தீவிர அரசியலில் ஈடுபட போகிறார்.” என்கிறார்கள்.