அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடியை நீக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்

சென்னை: பெண்களையும், இந்து சமய நம்பிக்கையையும் கேவலமாகப் பேசிய பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெரியார் திராவிடர் கழக கூட்டத்தில் மாநில அமைச்சர் பொன்முடி அருவருக்கத்தக்க வகையில் இந்துக்கள் புனிதமாக கருதும் திருநீறு, திருமண் ஆகியவற்றை குறிப்பிட்டு பேசிய விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.

இத்தகைய கருத்தை பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட அமைச்சர் பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த காரணத்திற்காகவே அவரது அமைச்சர் பதவியை நீக்கம் செய்யவும் முடியும். இது போன்ற அநாகரிக பேச்சுக்களை பல சமயங்களில் திமுக பின்னணி கொண்டவர்கள் பேசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்துக்கள் வன்முறையில் இறங்குவதில்லை என்ற தைரியத்தில் தான் திமுக., திக. போன்ற கட்சிகள் கண்டபடி பேசுகிறார்கள். இதுவே வேற்று மதத்தினரின் குறியீடுகள் குறித்து யாராவது ஒருவர் பேசியிருந்தால், சமூக ஊடகத்தில் பதிவு செய்து இருந்தால் காவல்துறை நள்ளிரவில் பாய்ந்து சென்று கைது செய்து சிறையில் அடைத்து இருக்கும். இல்லை நீதிபதிகளே சமூக ஊடகத்தில் பார்த்ததற்கு நடவடிக்கை எடுக்க தானாக முன்வந்து கருத்து வெளியிட்டு இருப்பார்கள்.

ஆக, இந்துக்களின் புனிதமான சின்னங்களை பாலுறவுடன் சம்பந்தபடுத்தி மாநில அமைச்சரே பேசும் அவலம் தமிழகத்தில் இருக்கிறது என்பது எத்தகைய வேதனையானது. இந்துக்களிடம் போராடும் குணம் தீவிரமாக வேண்டும். இல்லையேல் சட்டமோ, நீதியோ, அரசு அதிகாரிகளோ ஒரு பொருட்டாகக்கூட மதிக்காத இழிநிலையை காண்கிறோம்.

அமைச்சர் பொன்முடி பேசிய இந்து விரோத கருத்து ஏற்புடையதா என்பது குறித்து திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின்தான் விளக்கம் தர வேண்டும். திமுக எம்பி ஆ. ராசா திமுகவினர் இந்து சமய சின்னங்களை அணியக்கூடாது என்று பேசினார். இதுபோன்ற பேச்சு திமுகவின் உள்நோக்கத்தை தமிழர்களுக்கு வெளிக்காட்டுகிறது.

திமுக தலைவர்களுக்கு இந்து சமய நம்பிக்கை இல்லாமல் இருப்பது அவர்களின் தனிப்பட்ட உரிமை. ஆனால் திமுகவில் இருப்பவர்கள் சமய சின்னங்களை அணிய கூடாது என்பதும், இந்து சமய நம்பிக்கையை அமைச்சர் பொன்முடி கொச்சைப்படுத்தையும் இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

அமைச்சர் பொன்முடி பேசிய அருவருக்கத்தக்க கருத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டித்து அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.