அறநிலையத் துறை சட்ட விவகார வழக்குகள்: உயர் நீதிமன்றத்தை நாட உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி மாநில அறநிலையத் துறை சட்டங்களின் செல்லுபடித் தன்மையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை முடித்து வைத்துள்ள உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்களை நாட உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு மறைந்த சுவாமி தயானந்த சுவாமி, டாக்டர் சுப்ரமணியன் சுவாமி மற்றும் பலர் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை சட்டம் 1959, புதுச்சேரி சட்டம் 1932, ஆந்திரா மற்றும் தெலங்கானா அறநிலையத் துறை சட்டம் 1987 ஆகியவற்றின் அரசியல் சாசன செல்லுபடி தன்மையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகள் மீதான விசாரணை நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், மூத்த வழக்கறிஞர்கள் குரு கிருஷ்ணகுமார், சி.எஸ்.வைத்யநாதன் ஆகியோர் ஆஜராகி, “இந்த சட்டங்கள் அரசியலமைப்பு சட்டங்களுக்கு விரோதமானவை” என வாதிட்டனர்.

பதிலுக்கு தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் ஆர்.சண்முகசுந்தரம், என்.ஆர்.இளங்கோ, அமித் ஆனந்த் திவாரி மற்றும் வழக்கறிஞர் என்.ஆர்.ஆர்.அருண் நடராஜன் ஆகியோர், “தமிழ்நாடு அறநிலையத் துறை சட்டத்தின் செல்லுபடி தன்மையை எதிர்த்து நேரடியாக உச்ச நீதிமன்றத்தை அணுகியது தவறு” என வாதிட்டனர்.

இதேபோல ஆந்திரா, தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் தரப்பிலும், மத்திய அரசு தரப்பிலும் வாதிடப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்குகளை அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்களே விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டு நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இந்த வழக்குகளை முடித்து வைத்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.