புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் புனித அற்புதமாதா அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் கலிபுல்லா நகர் பகுதியைச் சேர்ந்த முகமதுயாசின் – சபுருநிஷா தம்பதியரின் மகன்களான அர்ஜத் (வயது:13), முகமது யூனுஸ் (வயது:11) ஆகிய இருவரும் 8 மற்றும் 6-ம் வகுப்புகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், 6-ம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வின் ஆங்கில தேர்வு நேற்று முன்தினம் நடந்தது. இந்த தேர்வுக்கு அர்ஜத், முகமது யூனுஸ் ஆகிய சகோதரர்கள் இருவரும் வராதது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து, அப்பள்ளியின் தலைமையாசிரியர் சூசைராஜ், தனது டூவீலரில் அப்பள்ளிக்கு வராத சகோதரர்களின் வீடு தெரிந்த ஒரு மாணவனை அழைத்துக் கொண்டு, பள்ளியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரமுள்ள அந்த மாணவர்கள் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது, வீட்டுக்கு வந்த தலைமையாசிரியரை பார்த்த அந்த சகோதரர்கள் இருவரும், வீட்டிலிருந்து அருகே உள்ள தைல மரக்காடு மற்றும் முந்திரிகாடு பகுதிக்கு ஓடிச் சென்று ஒளிந்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த சூசைராஜ், தானும் விடாமல் விரட்டிச் சென்று அந்த மாணவர்களைப் பிடித்தார். அதன்பிறகு, அந்த மாணவர்கள் இருவரையும் அவர்களது வீட்டிற்கு அழைத்து கொண்டு வந்து, மாணவர்களின் தாயாரிடம் ஒப்படைத்தார். அவர்களது தாயாரிடம் தற்போது முழு ஆண்டு தேர்வு நடைபெறுவதால் இந்த இரண்டு மாணவர்களும் பள்ளிக்கு தேர்வு எழுத வராததால், அவர்களை தேடி வந்ததாக கூறினார்.

இதனால், அதிர்ச்சியடைந்த அவர், தனது மகன்கள் இருவரையும் பள்ளி சீருடை அணிய வைத்து, பள்ளிக்குச் செல்லுமாறு தலைமையாசிரியரிடம் ஒப்படைத்தார்.
இதனையடுத்து, பள்ளி தலைமையாசிரியர் சூசைராஜ், தனது டூவிலரில் இரண்டு மாணவர்களையும் ஏற்றிக்கொண்டு, பள்ளிக்கு அழைத்துச் சென்று தேர்வு எழுத வைத்தார். இச்சம்பவம், பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், தலைமையாசிரியர் சூசைராஜுக்கு பாராட்டும் குவிந்து வருகிறது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
