பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா ரூ.500 கோடி ஊழல் செய்திருப்பதாக சமூக செயற்பாட்டாளர் ஒருவர், ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டிடம் புகார் மனு அளித்துள்ளார்.
பெங்களூருவை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ராமமூர்த்தி கவுடா. இவர், கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு புகார் மனுவை அனுப்பினார். அதில் கூறியிருப்பதாவது:
கடந்த 2015-ம் ஆண்டில் சுரங்கத்துக்காக நிலத்தை குத்தகைக்கு வழங்கியது, புதுப்பித்தது உள்ளிட்டவற்றில் முறைகேடு நடைபெற்றுள்ளது. அப்போது முதல்வராக இருந்த சித்தராமையாவுக்கு முறைகேட்டில் நேரடியாக தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
8 சுரங்க நிறுவனங்களுக்கு சுரங்க குத்தகைகளை வழங்கியதற்காக அவர் ரூ.500 கோடியை லஞ்சமாக பெற்றுள்ளார். இதனால் அரசுக்கு ரூ.5 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. அவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும். சித்தராமையா மீது வழக்கு தொடர அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு ராமமூர்த்தி கவுடா கோரியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து சட்ட நிபுணர்களின் கருத்தை ஆளுநர் தாவர்சந்த் கெலாட் கோரியுள்ளார். புகார் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்குமாறு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து பாஜக எம்எல்ஏ அஸ்வத் நாராயணா கூறும்போது, ”சமூக செயற்பாட்டாளர் ராமமூர்த்தி கவுடாவின் புகார் குறித்து விசாரிக்க வேண்டும். அவருக்கு கிடைத்துள்ள ஆதாரங்களை பரிசீலித்து முதல்வர் மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி அளிக்க வேண்டும். ஏழைகளின் பாதுகாவலர் என கூறிக் கொள்ளும் சித்தராமையா, இந்த முறைகேடு குறித்து உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும்” என்றார்.