தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜகவை சேர்ந்த முன்னாள் எம்.பி பொன்.ராதாகிருஷ்ணன் என வரிசையாக இரண்டு வாரங்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டிற்கு படையெடுத்தனர்.
எடப்பாடி பழனிசாமியின் மவுனம்
எடப்பாடி பழனிசாமி, வேலுமணி சந்திப்பிற்கு பிறகு, ‘2026-ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைந்தப் பின்…” என்று அமித் ஷா சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். ஆனால், “கூட்டணி பேச்சுவார்த்தைக்கு இன்னும் நாள்கள் உள்ளது” என்று எடப்படியோ இன்று வரை கூட்டணி குறித்து உறுதி செய்யாமல் இருக்கிறார்.

பாஜக மாநில தலைவர் ரேஸ்!
இன்னொரு பக்கம், தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நியமனம் நடக்க உள்ளது. இந்தப் பேச்சு எழும் வரை மிகவும் நம்பிக்கையுடன் இருந்த அண்ணாமலை இப்போது, ‘நான் தொண்டனாக இருக்கத் தயார்’ என்று ஏனோ அடக்கி வாசித்து வருகிறார்.
என்னதான் இப்படி பேசினாலும் பிரதமர் மோடியுடன் சந்திப்பு, டெல்லியில் அமித் ஷாவுடன் சந்திப்பு, குருசாமியுடன் சந்திப்பு என தன் பதவியை தக்க வைக்க காய்களை நகர்த்தி தான் வருகிறார் அண்ணாமலை.
இவருக்கு முன்பே டெல்லியில் அமித் ஷாவை பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்திருந்தார் என்பதும், மாநில தலைவர் ரேசில் நயினார் நாகேந்திரனும் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஓபிஎஸ்ஸும், செங்கோட்டையனும்
மற்றொரு பக்கம், தற்போது அதிமுக தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து வந்துள்ளார்.
சில ஆண்டுகளாக, அதிமுக தலைமைக்கு முட்டி மோதிக்கொண்டிருக்கும் ஓபிஎஸ் அமித் ஷாவை சந்திக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
நேற்று முளைத்த பிரச்னை
நேற்று தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் இருக்கும் பாமகவில், ‘தலைவர் பதவியை மீண்டும் நானே எடுத்துக்கொள்கிறேன்’ என்று அதன் நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதையெல்லாம் விட, அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.
இத்தனை நடக்கும் இந்த நேரத்தில் தமிழ்நாட்டிற்கு விசிட் அடித்திருக்கிறார் அமித் ஷா.

அடுத்த இரண்டு நாள்களுக்கு…
நேற்று இரவு சென்னைக்கு வந்த அமித் ஷா அடுத்த இரண்டு நாள்களுக்கு தமிழ்நாட்டில் தான் இருக்கப் போகிறார்.
இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்த இரண்டு நாள்களில் பாஜக மாநில தலைவர் அறிவிப்பு, கூட்டணி அறிவிப்பு, அமித் ஷா உடன் முக்கிய தலைவர்களுடன் சந்திப்பு என தமிழ்நாடு அரசியல் களம் சூடு பிடிக்கப்போகிறது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
