சென்னை கொரட்டூர், லஷ்மண முதலியார் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர், கொரட்டூர் காவல் நிலையத்தில் கடந்த 17.3.2025-ல் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், கூறியிருப்பதாவது, “நான் மேற்கண்ட முகவரியில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். சென்னை பாடியில் உள்ள பிரபல வணிக நிறுவனத்தில் மேனேஜராக கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். அந்த வணிக நிறுவனத்தில் தங்கம் மற்றும் வைர நகைகள் விற்பனை பிரிவில் மேலாளராக இளையராஜா என்பவர் வேலை செய்து வருகிறார். கடந்த 16.03.2025-ம் தேதி மேலாளர் இளையராஜா என்னிடம் வந்து கம்மல் விற்பனை பிரிவில் வைத்திருந்த தங்க கம்மல் இருப்புகளை சரிபார்த்த போது 54 ஜோடி எண்ணிக்கை கொண்ட தங்க கம்மல் குறைவாக இருப்பதாகவும், வைர நகைகளின் இருப்புகளை சரிபார்த்த போது 8 வைர வளையல் மற்றும் வைர தாலி செயின்கள் குறைவாக இருப்பதாகவும் தெரிவித்தார். அதனால் நகைகளைத் திருடியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கம்மல் பிரிவின் இன்சார்ஜாக இருந்த முத்துகிருஷ்ணன், வைர நகைகள் பிரிவின் இன்சார்ஜாக இருந்த விஜயகுமார் ஆகியோர் சேர்ந்து தங்க நகைகள், வைர நகைகளைத் திருடி அடகு கடையில் அடமானம் வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்து விசாரித்தபோது, திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இது குறித்து கொரட்டூர் போலீஸார் கூறுகையில், “பிரபல ஜூவல்லரியில் இன்சார்ஜாக இருந்த முத்துகிருஷ்ணனும் விஜயகுமாரும் சேர்ந்து தங்க நகைகள், வைர நகைகளைத் திருடியிருக்கிறார்கள். பின்னர் அந்த நகைகளுக்குப் பதிலாக கவரிங் நகைகளை கடையில் வைத்து கணக்கு காட்டி வந்திருக்கிறார்கள். முத்துகிருஷ்ணன், அடகு வைத்த நகைகள் மூலம் கிடைத்த பணத்தை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்திருக்கிறார். அதைப்போல விஜயக்குமார், கடனை அடைக்க அந்தப் பணத்தைப் பயன்படுத்தியிருக்கிறார். இந்த வழக்கில் முத்துகிருஷ்ணன், விஜயகுமார் ஆகியோரை கைது செய்துவிட்டோம். இதில் முத்துகிருஷ்ணனிடமிருந்து 40 கிராம் எடையுள்ள 5 ஜோடி தங்க கம்மல்கள், இரண்டு ஜோடி கவரிங் கம்மல் ஆகியவற்றைப் பறிமுதல் செய்திருக்கிறோம். விஜயகுமாரிடமிருந்து 24 கிராம் எடையுள்ள தங்க செயினையும் மீட்டுள்ளோம். திருடப்பட்ட நகைகளின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் என தெரியவந்திருக்கிறது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம்” என்றனர்.