சென்னை: திமுக எம்.பி அருண் நேரு மற்றும் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் ஆகியோரிடமிருந்து நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரிகள் பணியிடமாற்றத்துக்கு லஞ்சம் வசூலித்ததற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக அமலாக்கத் துறை அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, அவரது மகனும் பெரம்பலூர் மக்களவைத் தொகுதி எம்.பியுமான அருண் நேரு மற்றும் நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் ஆகியோருக்குச் சொந்தமான சென்னை உள்பட 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை 3 நாட்களாக சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.
இது தொடர்பாக அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னை, திருச்சி மற்றும் கோவை உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில்,
பல்வேறு குற்றவியல் ஆவணங்கள், டிஜிட்டல் பதிவுகள் மற்றும் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. அமைச்சர் நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் மற்றும் அருண் நேரு ஆகியோர் மட்டுமின்றி, அமைச்சர் நேரு பதவி வகிக்கும் நகராட்சி நிர்வாகத் துறையிலும் மோசடி நடந்துள்ளது.
நகராட்சி நிர்வாகம் மர்றும் குடிநீர் வழங்கல் துறையில் அதிகாரிகளை இடமாற்றம் செய்வதற்கும், பணியிடமாற்றம் செய்வதற்கும் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அதேபோல், டெண்டர்களைப் பெறுவதற்காக முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட கமிஷன் தொகைகளைப் பெற்றதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. திட்டமிட்ட நோக்கங்களுக்காக பெருமளவில் ஹவாலா பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது,” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.