தோனி வந்தும் ஒண்ணும் மாறல… சிஎஸ்கே படுதோல்வி… படு குஷியில் கேகேஆர்!

IPL 2025, CSK vs KKR: சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (ஏப். 11) நடைபெற்றது. டாஸ் வென்ற கேகேஆர் அணி கேப்டன் ரஹானே பந்துவீச்சை தேர்வு செய்தார்.

CSK vs KKR: சிஎஸ்கேவின் மோசமான பேட்டிங்

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணிக்கு மோசமான தொடக்கமே கிடைத்தது. ரச்சின் ரவீந்திரா – கான்வே ஆகியோர் தொடக்க கட்டத்தில் ரன் அடிக்க கடுமையாக திணறினர். கான்வே இரண்டு பவுண்டரிகளை அடித்தாலும் மொயின் அலி பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, கடுமையான அழுத்தத்திற்கு ஆளான ரச்சன் ரவிந்திரா நான்கு ரன்களில் ஆட்டமிழந்தார். 

3வது பேட்டராக உள்ளே வந்த ராகுல் திரிபாதி பவுண்டரியே அடிக்காமல் திணற, விஜய் சங்கர் மட்டும் பவுண்டரிகளை அடிக்க முயற்சித்தார். அவர் கொடுத்த 2 எளிமையான வாய்ப்புகளை கேகேஆர் அணி தவறவிட்டது. ஆனாலும், விஜய் சங்கர் ரன் அடிக்க வேண்டும் என அழுத்தத்தில் இருந்தார். பவர்பிளேவில் வருண் சக்ரவர்த்தியை இறங்கி அடித்தாலும் கூட அவரால் பவர்பிளேவுக்கு பின் அந்தளவிற்கு விளையாட இயலவில்லை. அவரும் 29 ரன்களில் வருண் பந்துவீச்சிலேயே ஆட்டமிழந்தார். அவர் 29 பந்துகளில் 2 பவுண்டரி, 1 சிக்ஸரை அடித்திருந்தார்.

CSK vs KKR:  104 ரன்களே இலக்கு

திரிபாதி 22 பந்துகளில் 1 பவுண்டரியை மட்டும் அடித்து 16 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த அஸ்வின் 1, ஜடேஜா 0, இம்பாக்ட் வீரர் ஹூடா 0, தோனி 1, நூர் அகமது 1 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி விக்கெட்டுக்கு தூபே உடன் அன்ஷூல் கம்போஜ் ஓரளவு தாக்குபிடித்தார். தூபேவுக்கு கடைசி 2 ஓவர்களில்தான் அடிக்கவும் செய்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே 103 ரன்களையே அடித்தது. தூபே 29 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 31 ரன்களை அடித்தார். சுனில் நரைன் 3, ஹர்ஷித் ராணா மற்றும் வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளையும், வைபவ் அரோரா மற்றும் மொயின் அலி தலா 1 விக்கெட்டையும் எடுத்தனர்.

CSK vs KKR: சீறிப்பாய்ந்த கேகேஆர்

104 ரன்கள் என்ற இலக்கை நோக்கி கேகேஆர் சீறிப்பாய்ந்தது. சிஎஸ்கே அணி மொத்தமே 1 சிக்ஸரை அடித்த நிலையில், பவர்பிளேவிலேயே 4 சிக்ஸரை கேகேஆர் அணி அடித்தது. டி காக் 16 பந்துகளில் 3 சிக்ஸருடன் 23 ரன்களையும், சுனில் நரைன் 18 பந்துகளில் 5 சிக்ஸர், 2 பவுண்டரி உடன் 44 ரன்களையும் எடுத்தனர். அஜிங்கயா 20, ரின்கு சிங் 15 ரன்களை அடிக்க 10.1 ஓவரிலேயே கேகேஆர் அணி இலக்கை அடைந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 59 பந்துகளை மீதம் வைத்து வெற்றிபெற்றது. இந்த இன்னிங்ஸில் கேகேஆர் மட்டும் 10 சிக்ஸரை பறக்கவிட்டது கவனிக்கத்தக்கது. சுனில் நரைன் ஆட்ட நாயகன் விருதை வென்றார். 

Match 25. Kolkata Knight Riders Won by 8 Wicket(s) https://t.co/gPLIYGimQn #CSKvKKR #TATAIPL #IPL2025

— IndianPremierLeague (@IPL) April 11, 2025

CSK vs KKR: புள்ளிப்பட்டியல் அப்டேட்

புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு கேகேஆர் முன்னேறியது. இதுவரை 6 போட்டிகளில் விளையாடி கேகேஆர் 3இல் வெற்றி, 3இல்  தோல்வியடைந்துள்ளது. சிஎஸ்கே அணி ஐபிஎல் வரலாற்றில் தொடர்ச்சியாக 5 தோல்விகளை சந்தித்துள்ளது, மேலும், முதல்முறையாக சேப்பாக்கத்தில் தொடர்ச்சியாக 3 தோல்விகளை சந்தித்துள்ளது. 

சிஎஸ்கே 9வது இடத்தில் தத்தளிக்கிறது. 10வது இடத்தில் ஹைதராபாத் உள்ளது. குஜராத், டெல்லி அணிகள் முறையே முதலிரண்டு இடங்களில் உள்ளன. ஆர்சிபி, பஞ்சாப், லக்னோ, ராஜஸ்தான், மும்பை அணிகள் முறையே 4வது, 5வது, 6வது, 7வது, 8வது இடத்தில் உள்ளன. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.