‘பிரம்ம குமாரிகள்’ தலைவர் மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்

பிரம்ம குமாரிகள் அமைப்பின் தலைவி தாதி ரத்தன் மோகினி மறைவுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரம்ம குமாரிகள் அமைப்பின் தலைமை நிர்வாகியாக இருந்தவர் தாதி ரத்தன் மோகினி(101). இவரது 100-வது பிறந்தநாள் கடந்த மாதம் 25-ம் தேதி கொண்டாடப்பட்டது. இவருக்கு கடந்தவாரம் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதனால் இவர் ராஜஸ்தானிலிருந்து, குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் கடந்த செவ்வாய் கிழமை அன்று மறைந்தார்.

அவரது உடல் மக்கள் அஞ்சலிக்காக ராஜஸ்தானின் அபு ரோட்டில் உள்ள பிரம்ம குமாரிகள் அமைப்பின் தலைமையகமான சாந்திவனத்தில் வைக்கப்பட்டது. அவருக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதிச் சடங்குகள் நேற்று நடைபெற்றன.

பிரம்ம குமாரிகள் அமைப்பின் 2-வது தலைமை நிர்வாகியாக தாதி ரத்தன் மோகினி கடந்த 2021-ம் ஆண்டு பொறுப்பேற்றார். இவர் பாகிஸ்தானில் உள்ள ஹைதராபாத் சிந்து பகுதியில் கடந்த 1925-ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதி பிறந்தார். இவரது உண்மையான பெயர் லட்சுமி. மிகவும் வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர், பிரிவினைக்குப்பின் இந்தியாவில் குடியேறினார். கடந்த 1954-ம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற உலக அமைதி மாநாட்டில் பிரம்ம குமாரிகள் அமைப்பின் சார்பில் இவர் பங்கேற்றார். இவர் கடந்த 1985-ம் ஆண்டு தொடர்ச்சியாக ஆன்மீக பயணங்களை மேற்கொண்டார். கடந்த 2006-ம் ஆண்டு இவர் 31,000 கி.மீ பயணம் செய்து கலாச்சாரம் மற்றும் நேர்மையான நெறிகளை பரப்பினார்.

தாதி ரத்தன் மோகினி மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். போர்ச்சுக்கல் பயணத்தில் ஈடுபட்டுள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ‘‘ பிரம்ம குமாரிகள் அமைப்புக்கு ஒளிவிளக்காக திகழ்ந்த தாதி ரத்தன் மோகினி, எனது சொந்த வாழ்க்கை பயணத்திலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார்’ என தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: “தாதி ரத்தன் மோகினி உயர்ந்த ஆன்மீகவாதியாகத் திகழ்ந்தார். அவர் ஒளி, ஞானம் மற்றும் கருணையின் கலங்கரை விளக்கமாக நினைவுகூரப்படுவார். ஆழ்ந்த நம்பிக்கை, எளிமை மற்றும் சேவைக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றில் வேரூன்றிய அவரது வாழ்க்கைப் பயணம் வரும் காலங்களில் பலருக்கும் ஊக்கமளிக்கும்.

பிரம்ம குமாரிகளின் உலகளாவிய இயக்கத்திற்கு அவர் சிறந்த தலைமையை வழங்கினார். அவரது பணிவு, பொறுமை, சிந்தனையில் தெளிவு மற்றும் கருணை எப்போதும் தனித்து நிற்கும். அமைதியை நாடும் மற்றும் நமது சமூகத்தை மேம்படுத்த விரும்பும் அனைவருக்கும் அவர் தொடர்ந்து பாதையை ஒளிரச் செய்வார். அவருடனான எனது சந்திப்புகளை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். இந்தத் துயரமான தருணத்தில் அவரது அபிமானிகளுக்கு எனது இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி. இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.