கோவை: கோவை மாநகர சைபர் க்ரைம் பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த சுகன்யா கடந்தஆண்டு மே மாதம் அளித்த புகாரில், ‘பெண் காவலர்கள், உயரதிகாரிகள் குறித்து அவதூறாகப் பேசிய சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். அதன் பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து சங்கரை கைது செய்தனர்.
தொடர்ந்து, பல்வேறு காவல் நிலையங்களில் சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைகளை ஒரே இடத்துக்கு மாற்ற வேண்டும் என சவுக்கு சங்கர் தரப்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனடிப்படையில், சவுக்கு சங்கர் மீதான அவதூறு வழக்குகளை கோவைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுகுறித்து கோவை மாநகர சைபர் க்ரைம் போலீஸார் கூறும்போது, “திருச்சி மாநகர், திருச்சி மாவட்டம், மதுரை, திண்டுக்கல், விழுப்புரம், ராணிப்பேட்டை, பெரம்பலூர், சிவகங்கை, தருமபுரி, சேலம், சென்னை, நாகை, நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய 15 இடங்களில் உள்ள காவல் நிலையங்களில் உள்ள வழக்குகள் இங்கு மாற்றப்பட்டு, 15 புதிய வழக்குகள் சவுக்கு சங்கர் மீது பதிவு செய்யப்பட்டு உள்ளன’’ என்றனர்.