Aadhaar News In Tamil: ஆதார் அட்டையை கையில் வைத்துக் கொண்டு அழைவதற்கு மாற்று வழியாக செயலி ஒன்றை இந்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. முற்றிலும் தனிநபர் பாதுகாப்பை மையப்படுத்தி வடிவமைக்கப்பட்டு உள்ளது. வாருங்கள் ஆதார் செயலையின் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதைக் குறித்து பார்க்கலாம்.
வங்கி கணக்கு, பாஸ்போர்ட் விண்ணப்பம் உள்ளிட்ட எந்த வகையான அரசு சேவைகளாக இருந்தாலும், அவற்றை பெற ஆதார் அட்டை அவசியமாகி இருக்கிறது. திடீர் பயணம், வெளியூர்களில் ஹோட்டல்களில் தங்குவதற்கு கூட ஆதார் கட்டாயமாக தேவைப்படுவதால் மக்கள் செல்லும் இடங்களில் எல்லாம், ஆதார் அட்டையை எடுத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. இது போன்ற சூழல்களில் சில சமயங்களில் தனிப்பட்ட தரவுகள் திருடப்பட்டு தவறாக பயன்படுத்தப்படுகிறது.
இப்பிரச்சனைகளுக்கு முடிவு கட்டுவதற்காக ஒன்றிய அரசு யுஐடிஏஐ (UIDAI) உதவியுடன் “ஆதார் செயலி” ஒன்றை சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்துள்ளது. இது பார்ப்பதற்கு டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கான செயலி போல் காட்சியளிக்கிறது. இதனை கியூஆர் கோடு மற்றும் முக அடையாளம், ஏஐ தொழில்நுட்பம் மூலம் தனிநபர் பயன்படுத்தி கொள்ள முடியும்.
100% தரவு பாதுகாப்புக்கான ஆதார் செயலியை பயனாளர்கள் எப்படி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்ற தகவலையும் ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் எம் ஆதார் (M Aadhaar) என தட்டச்சு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் அச்செயலியை திறந்து 12 இலக்க ஆதார் எண் மற்றும் அதனுடன் பதிவு செய்த செல்போன் எண்ணை உள்ளீடு செய்து ஓடிபி மூலம் சரிபார்ப்பது அவசியம். அதனைத் தொடர்ந்து இ ஆதார் (e-Aadhaar) அட்டையை பிடிஎப் வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
ஆதார் பீட்டா வெர்ஷன் செயலி அறிமுகத்தால் இனி ஒவ்வொரு இடங்களுக்கும் ஆதார் அல்லது அதன் நகலை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. அத்துடன் முக அடையாளம் மூலம் மட்டுமே செயலி இயக்கப்படும் என்பதால் 100% தரவு பாதுகாப்புடன் தேவையான தகவல்களை மட்டுமே இச்செயலி வழங்கும் என்றும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
தற்போது சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்துள்ள ஆதார் செயலிக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததும், அச்செயலி அனைத்து பயனாளர்களுக்கும் விரிவுபடுத்தப்படுத்தும் வகையில் நடைமுறைக்கு வரும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.