அஜித் நடித்திருக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் நேற்றைய தினம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. ‘ஒரு ஆடர் லவ்’ மூலம் வைரலாகி இளைஞர்களின் க்ரஷ் லிஸ்டில் இடம் பிடித்தவர் நடிகை ப்ரியா வாரியர்.

தற்போது ‘குட் பேட் அக்லி’ படத்தில் இவர் நடித்திருக்கிறார். படத்தில் ‘தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’ பாடலுக்கு இவர் நடனமாடிய காணொளிதான் தற்போதைய சமூக வலைதளப் பக்கங்களில் வைரல். இப்படத்தில் நடித்தது பற்றி நெகிழ்ந்துப் பதிவிட்டிருக்கிறார்.
தன்னுடைய சோசியல் மீடியா பதிவில் ப்ரியா வாரியார், ”எங்கிருந்து தொடங்குவது என்றே தெரியவில்லை?! இதை நான் நீண்ட நாட்களாக உள்ளே வைத்திருந்தேன். நான் எழுதும் எதுவும், உங்கள்மீது நான் கொண்டிருக்கும் அன்பை வெளிப்படுத்த போதுமானதாக இருக்காது சார். முதல் உரையாடலில் இருந்து படப்பிடிப்பின் கடைசி நாள் வரை யாரும் புறக்கணிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்தீர்கள்.
செட்டில் இருக்கும்போதெல்லாம் எங்களை எல்லோரையும் சிறப்பாக கவனித்து உறுதி செய்ய எப்போதும் ஒரு படி மேலே சென்றீர்கள். குழுவாக கப்பலில் நாம் சேர்ந்து சாப்பிட்ட அந்த உணவுகளை, நகைச்சுவைகளைப் பகிர்ந்து, சிறந்த நேரத்தை செலவிட்டதை மறக்க முடியவில்லை.
இவ்வளவு ஆர்வமும் பற்றும் கொண்ட ஒருவரை நான் சந்தித்ததில்லை. உங்களில் உள்ள சிறிய “பினோக்கியோ” வை நான் மிகவும் மதிக்கிறேன், அன்பு செலுத்துகிறேன். குடும்பம், கார், பயணம், பந்தயம் பற்றி பேசும்போது உங்கள் கண்கள் பிரகாசிப்பது சோர்ந்த கண்களுக்கு ஒரு அற்புதமான காட்சி. உங்களைச் சுற்றி இருப்பவர்கள் ஒவ்வொருவரையும் நீங்கள் கவனித்து அங்கீகரிக்கிறீர்கள். செட்டில் உங்கள் பொறுமையும் அர்ப்பணிப்பும் என்னைப் போன்ற இளம் ஆர்வலர்களுக்கு உத்வேகம் அளிக்கிறது, அதை நான் வருடங்களுக்கு எடுத்துச் செல்வேன்.

நீங்கள் ஒரு உண்மையான ஜெம்! உங்களிடமிருந்து நான் பெற்ற பாடம் என்னவென்றால், வாழ்க்கை எவ்வளவு உயரத்தைக் காட்டினாலும் பணிவாக இருக்க வேண்டும். “தொட்டு தொட்டு” பாடல் சிறப்பானதாக இருக்கும். அஜித் சார், உங்களுடன் பணியாற்றிய அனுபவத்தை நான் என்றென்றும் போற்றுவேன்.” எனப் பதிவிட்டிருக்கிறார்.