ரஜினிகாந்த்- நெல்சன் கூட்டணியின் ‘ஜெயிலர்’ 2′ படப்பிடிப்பு அடுத்தடுத்த கட்டங்களாகப் பரபரப்பாக முன்னேறி வருகிறது. சென்னை ஷெட்யூலைத் தொடர்ந்து இப்போது கோவை அருகே உள்ள அட்டப்பாடியில் இன்று தொடங்கியிருக்கிறது.

முதல் பாகமான ‘ஜெயிலர்’ ரஜினியின் திரைப்பயணத்தில் அதிக வசூலை ஈட்டிய படமாகும். பாக்ஸ் ஆபீஸில் 650 கோடிக்கு மேல் வசூலை குவித்திருக்கிறது. இந்த வெற்றியைத் தொடர்ந்து ‘ஜெயிலர் 2’ உருவாகும் என்று எதிர்பார்ப்பு கிளம்பியது.

சில வாரங்களுக்கு முன்னர் சென்னையில் ராயப்பேட்டை, வளசரவாக்கம் உள்பட சில இடங்களில் ‘ஜெயிலர் 2’ முதற்கட்ட படப்பிடிப்பு நடந்தது. இதில் ரஜினி, யோகி பாபு மற்றும் சிலருடன் ஆக்ஷன் காட்சிகளும், காமெடி காட்சிகளும் படமாக்கப்பட்டன. அதன் பின் ஷூட்டிங் பிரேக் கிடைக்கவே ரிலாக்ஸ் ட்ரிப் ஆக இடையே தாய்லாந்து பறந்து வந்தார் ரஜினி. இப்போது மீண்டும் படப்பிடிப்பு தொடர்ந்துள்ளது. கேரளா எல்லையான அட்டப்பாடியில் இதன் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இதற்காக நேற்று ரஜினி கோவை புறப்பட்டுச் சென்றார்.
இந்த ஷெட்யூலில் முதல் பாகத்தில் நடித்த முத்துவேல் பாண்டியனின் மருமகளாக நடித்த மிர்ணா மற்றும் எஸ்.ஜே.சூர்யாவும் நடித்து வருவதாகச் சொல்கிறார்கள். இந்த பாகத்தில் எஸ்.ஜே.சூர்யா வந்ததே சுவாரஸ்யமானது. எஸ்.ஜே.சூர்யா இயக்குநராக பெயர் வாங்கிக் கொண்டிருந்த சமயத்தில் ரஜினியிடம் சூப்பரான கதை ஒன்றை சொல்லியிருந்தார். அதில் ரஜினிக்கு மூன்று கெட் அப்கள். நதிநீர் இணைப்பு தொடர்பான ஒரு கதை என்றும் ரஜினிக்கு அந்த கதை ரொம்பவும் பிடித்திருந்தாலும் ஏனோ அந்தப் படம் டேக் ஆஃப் ஆகவில்லை. அதன்பின் எஸ்.ஜே.சூர்யாவும் வேறு யாரிடமும் அந்தக் கதையை சொல்லவில்லை. இந்நிலையில் ‘ஜெயிலர் 2’வில் எஸ்.ஜே.சூர்யாவே விரும்பி வந்திருப்பதாகச் சொல்கிறார்கள். அட்டப்பாடியில் தொடர்ந்து இரண்டு வாரங்கள் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் அதன் பின், சென்னையில் அடுத்த ஷெட்யூல் நடைபெறும் என்றும் சொல்கிறார்கள்.