மூன்று முதியவர்கள் தொடர்ச்சியாக ஒரே பாணியில் வாழைப்பழத்தை வாயில் வைத்து கொலை செய்யப்படுகிறார்கள். இதைச் செய்பவன் ‘பனானா கில்லர்’ எனப்படும் சீரியல் கில்லர்.
அவனது அடுத்த டார்கெட், மருமகளிடம் தவறாக நடந்து கொண்டதால் மகனால் முதியோர் இல்லத்துக்கு அனுப்பப்பட்ட முதியவர் ஒருவர். ஆனால், அவர் அங்கிருந்து தப்பித்து விட, அவரோடு சேர்ந்து ஒரு நாயும் பயணிக்கிறது.
அது காணாமல் போன டி.எஸ்.பி-யின் வளர்ப்பு நாய். அதைத் தேடி அவர் ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டுகிறார்கள்.

அதே நேரத்தில், ட்ரெண்டியாக ஊர்க்காரர்களை இம்சை செய்து கொண்டிருக்கும் இளைஞர் லூக்தான் (பேசில் ஜோசப்) சீரியல் கில்லர் என போலீஸுக்குச் சந்தேகம் வருகிறது.
இதனால், அவரது காதலி ஜெஸி அவரை பிரேக்-அப் செய்கிறார். அவரை எப்படியாவது சமாதானம் செய்ய முயல்கிறார் லூக். அதேபோல், வெகு நாட்களாகத் திருமணம் ஆகாமல், இப்போது இல்வாழ்க்கைக்குத் தயாராகும் பஸ் டிரைவர் (சுரேஷ் கிருஷ்ணா), தனது தந்தையைச் சிறுவயதில் தொலைத்து இப்போதும் தேடிக்கொண்டிருக்கும் கண்டக்டர் (சிஜு சன்னி) என வரும் எல்லா துணை கதாபாத்திரங்களுக்கும் ஒரு கதையும் தேவையும் இருக்கின்றன.
இவர்கள் அனைவரையும் ஓர் இரவு நேர பஸ் பயணம் ஒன்றிணைக்க, அதற்குப் பிறகு என்ன ஆனது என்பதை வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் டார்க் ஹ்யூமரில் சொல்கிறது இந்த ‘மரண மாஸ்’.
ஆங்கிரி (கோபம்), சாட் (Chad), பேலன்ஸிங் சூப்பர் ஸ்டார் என முப்பரிமாணங்களில் ‘சிக்மா ஆண்’ (Sigma Male) அழிச்சாட்டியங்களை நையாண்டி செய்து பட்டையைக் கிளப்புகிறார் பேசில் ஜோசப்.
குறிப்பாக, மாஸ் ஹீரோக்களை நையாண்டி செய்யும் இடத்திலும், போதையில் லூட்டியடிக்கும் இடங்களிலும் அவரின் ‘மரணமாஸ்’ நடிப்பு செட்டாகிறது.

குற்றவுணர்வில் அழுவது, கதைக்கு மிகவும் தேவையான வித்தியாசமான சிரிப்பைக் கொடுத்து திரும்புவது என அனிஷ்மா அனிகுமார் சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.
டார்க் ஹ்யூமர் மீட்டரில் ஒரு முகம், பனானா கில்லராக ‘கடவுள் பாதி மிருகம் பாதி’ கொடூர முகம் எனத் தன் கதாபாத்திரத் தாவல்களைச் சொடக்கு போட்டுச் செய்து முடித்திருக்கிறார் ராஜேஷ் மாதவன்.
அருவியாக வரும் சிஜு சன்னியின் கண்ணீர் அருவி, ‘பார்த்தாலே பச்சை முகம்’ எனப் பரிதாபத்தைச் சம்பாதிக்கிறார். டிரைவர் சுரேஷ் கிருஷ்ணாவும் சிரிப்பு வண்டியில் சரியான நேரத்தில் ஹ்யூமரை டாப் கியரில் தூக்கியிருக்கிறார்.
மிகவும் ஜாலியான படத்தில் ஆங்காங்கே வரும் ரொமான்ஸ், சென்டிமென்ட் காட்சிகள் துருத்தாமல் இருக்க, பின்னணி இசையால் அந்த ஸ்டேஜிங்கை உடையாமல் காப்பாற்றியிருக்கிறார் ஜே.கே.
இரவு நேரத்தில் நகரும் காட்சிகளுக்குத் தேர்ந்த ஒளியுணர்வையும், பல கதாபாத்திரங்கள் நகரும் குறுகிய இடத்தில் சிறப்பான கோணங்களையும் பிடித்து அருமையான திரையாக்கத்துக்கு உதவியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் நீரஜ் ரவி.
திரைக்கதையின் வெவ்வேறு புள்ளிகளை இணைக்கும் படத்தொகுப்பாளர் சாமன் சாக்கோவின் கத்திரி படு ஷார்ப்பாக சுவாரஸ்யமான கட்களைக் கொடுத்திருக்கிறது.
பேசில் அணிந்து வரும் ரகளையான டி-ஷர்ட்கள் அனைத்தும் ‘ஹாஹா’ வாங்கிச் செல்கின்றன காஸ்ட்யூம் டிசைனர் மஸ்கர் கம்சாவுக்கு! குப்பைக் கிடங்குக்கு மத்தியில் நடக்கும் க்ளைமாக்ஸ் காட்சியில் கலை இயக்குனர் மணவ் சுரேஷின் உழைப்பு தெரிகிறது.

எடுத்தவுடனே நாயக பிம்ப சினிமாக்களையும், இன்றைய சில நியூஸ் மீடியாக்கள், யூடியூபர்கள் நடத்தும் அழிச்சாட்டியங்களையும் நையாண்டி செய்து ஆரம்பிக்கும் படம், அதன் ஜாலி மூடுக்கு நம்மையும் செட் செய்துவிடுகிறது.
மற்ற கதாபாத்திரங்கள், அவற்றின் பின், முன்கதைகள் என அனைத்திலுமே இந்த சிரிப்பு மீட்டரை இறங்காமல் பார்த்துக் கொள்கிறார்கள்.
குறிப்பாக, போலீஸ் ஸ்டேஷன் பகுதியும், அண்டர்டேக்கர்-கேன் காமெடிக்கும் திரையரங்கமே பிளாஸ்ட் ஆகிறது. ஒரு சிறு இடம் பிசிறு தட்டினாலும் சொதப்பிவிடும் டார்க் ஹ்யூமர் ஜானரில், சிஜு சன்னி, சிவபிரசாத் ஆகியோரின் திரைக்கதை படம் நெடுக ‘லாஃபிங் கேஸை’த் தூவியிருக்கிறது.
ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கான வளைவுகளுடனும் மெனக்கெடலுடனும் எழுதப்பட்டிருப்பது கூடுதல் பலம். இதைச் சிறப்பாக ஒன்றிணைத்து சிறப்பாக இயக்கியிருக்கிறார் இயக்குநர் சிவபிரசாத்.
பிற மலையாள படங்களை மேற்கோள் காட்டிவரும் நகைச்சுவை அது புரியாதவர்களுக்கு அந்நியமாகத் தெரிந்தாலும், மற்ற நகைச்சுவைகள் கவர்கின்றன.
சப்டைட்டில் எழுதியவரும் மொழிப்புலமையைக் காட்டாமல், கதையின் தேவை புரிந்து மீட்டருக்கு தகுந்தவாறு மொழிபெயர்த்திருப்பது கூடுதல் பலம்!
கதை பஸ்ஸுக்குள் வந்த பிறகு இன்னும் சுவாரஸ்யமாகினாலும், இடைவேளைக்குப் பிறகு சற்றே ‘வளைவுகளில் முந்தாதே’ மோடுக்குள் செல்கிறது. ஆனால், அதன் பிறகு வெட்டிங் போட்டோஷூட், கல்லறையில் டொவினோ கேமியோ ஆகியவை ‘கலகல கலாட்டா’ ரகம்.

‘பாலியல் சீண்டல் காட்சிகள்’ பத்தோடு பதினொன்றாக காமெடி காட்சிகளுக்கு மத்தியில் நகர்வது சற்றே நெருடல். ஆனால், கதைக்குச் சம்பந்தமில்லாமல், திடீரென அதிர்ச்சிக்காக மட்டுமே அதைத் திரைக்கதையில் சேர்க்காமல் இருந்தது ஆறுதல்.
தொழில்நுட்ப ரீதியாகவும், எழுத்திலும் ‘மரண மாஸ்’ செய்திருக்கும் இந்தப் படைப்பு, சேட்டன்களின் அடிப்பொலி சம்மர் சிரிப்பொலி!
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…