குட் பேட் அக்லி’ படத்தின் மூலம் மின்சாரத்தைப் பாய்ச்சுவதுபோல் மீண்டும் வைரல் ஹிட் அடித்துள்ளது ‘தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’ பாடல்.
‘தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’
கடந்த 1999-ஆம் ஆண்டு தரணி இயக்கத்தில் வெளியான ‘எதிரும் புதிரும்’ படத்தில் இடம்பெற்ற இப்பாடலுக்கு டான்ஸ் மாஸ்டர் ராஜு சுந்தரமும் சிம்ரனும் துள்ளிக்குதித்து பவர்ஃபுல் எனர்ஜியோடு ஆட்டம் போட்டிருப்பார்கள். அப்போதே, ஹிட் அடித்த இப்பாடல் தற்போது ‘குட் பேட் அக்லி’ மூலம் மீண்டும் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. சிம்ரனுக்கு பதிலாக ப்ரியா வாரியர் ஆடும் இளமைத் துள்ளும் ஆட்டக் காட்சிகளுக்கு ரசிகர்கள் ஹார்ட்டின்களை பறக்கவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்ஸ்டா ரீல்ஸ்களிலும் ரீ- கிரியேட் போஸ்ட்களாக குவிந்து வருகின்றன. இந்த நிலையில், இப்பாடலைப் பாடிய நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமியிடம் பேசினேன்…
`அப்பவே, பெரிய ஹிட் ஆச்சு’
“நான் பாடிய பாடல்களிலேயே எனக்கு ஃபேவரைட் ’தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’ பாடல்தான். சினிமாத்துறைக்கு வந்தப் புதுசுல பாடின ரெண்டாவது பாட்டு இது. ’எதிரும் புதிரும்’ படத்திலேயே’வித்யாசாகர் சார் மியூசிக்ல ‘காத்து பச பச’ பாடலைத் தொடர்ந்து இந்தப் பாடலையும் பாடினேன். அப்பவே, பெரிய ஹிட் ஆச்சு. அதுக்கப்புறம்தான், தொடர்ந்து நிறைய வாய்ப்புகள் வர ஆரம்பிச்சது. கச்சேரிகள்லயும் இந்தப் பாட்டை பாடச்சொல்லிக் கேட்டாங்க.
நாட்டுப்புறப் பாடகரான என்னால் இதுபோன்ற ஸ்டைலிஷ் பாடலை பாடமுடியும்னு நம்பிக்கை வெச்சு வாய்ப்புக் கொடுத்த தரணி சாருக்கும் வித்யாசாகர் சாருக்கும் நன்றியைத் தெரிவிச்சுக்கிறேன். தரணி சார்தான், வித்யாசாகர் சாருக்கு என்னை ரெக்கமெண்ட் பண்ணினார். நான் சினிமாவுக்கு அப்போ புதுசுங்கிறதால, பாடவே பயமா இருந்துச்சு.
வித்யாசாகர் சார் தான் என்கரேஜ் பண்ணி பாடவெச்சார். நான் பாடினேங்கிறதைவிட வித்யாசாகர் சார் அற்புதமா இசையமைச்சதாலதான் ‘தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’ எல்லொருடைய மனசை தொட்டு பேசி, பெரிய ஹிட் ஆச்சு.
‘நீங்க பாடின பாடல் வைரலாகிட்டிருக்குப்பா’
எனக்கு என்ன ஆச்சர்யம்னா ‘எதிரும் புதிரும்’ ரிலீஸாகி 25 வருடங்களாகியும் இப்பவும் டிரெண்ட் ஆகுற மாதிரி ரிதம் போட்டிருந்தார். நேத்து இசையமைச்ச மாதிரியே ரொம்ப ஃப்ரெஷ்ஷா இருக்கு. அதனால, எல்லா பெருமையும் கிரெடிட்டும் வித்யாசாகர் சாருக்குத்தான் போய்ச்சேரும்” என்பவர் ‘குட் பேட் அக்லி’ படம் குறித்து பேசினார்.
“நான் இன்னும் ‘குட் பேட் அக்லி’ படம் பார்க்கல. இனிமேல்தான் குடும்பத்தோட போய் பார்க்கலாம்னு இருக்கேன். என் பொண்ணுங்க ‘நீங்க பாடின பாடல் வைரலாகிட்டிருக்குப்பா’ன்னு சொன்னாங்க. வாட்ஸ்அப்லயும் நிறைய பேரு எடுத்து அனுப்புறதைப் பார்க்கும்போது நெகிழ்ச்சியா இருக்கு.
ரொம்ப நாள் ஆசை
அஜித் சாரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். ரொம்ப தன்னடக்கமானவர். அவருக்காக ஏற்கனவே, ’கீரை விதைப்போம்’, ‘ஜிங் ஜிக்கா-ன்னு ரெண்டு பாடல்கள் பாடியிருக்கேன். இப்போ, மூணாவதா அவரோட படத்துல நான் பாடின பாட்டு வர்றது ரொம்ப சந்தோஷமா இருக்கு. பெரிய கொடுப்பினைன்னுதான் சொல்வேன்.
அஜித் சாரை மீட் பண்ணனும்னு எனக்கு ரொம்ப நாள் ஆசை. ஆனா, அவரை மீட் பண்ற சூழல் கிடைக்கவே இல்ல. ’தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’ பாட்டு மூலமாவாது கிடைச்சா ஒரு போட்டோ எடுத்துப்பேன். ’அஜித் என்றால் தல; அவருக்கு இணை இல. புகழின் உச்சியில் இருந்தாலும் தலைக்கனம் இல. அவரைப் பார்ப்பதற்கு எப்போது கிடைக்கும் அவரது தல’ இது அவருக்காக நான் எப்பவும் சொல்றது, அவருக்காக காத்திருக்கேன்” என்கிறார் எதிர்பார்ப்புடன்.