ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இத்தொடரின் 27வது லீக் ஆட்டம் இன்று ஹைதராபாத்தின் ராஜுவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இதில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களான பிரப்சிம்ரன் சிங் மற்றும் பிரியான்ஸ் அர்யா களம் இறங்கினர். இருவரும் நல்ல தொடக்கத்தை கொடுத்த நிலையில், 66 ரன்கள் எடுத்த போது, பிரியான்ஸ் அர்யா 36 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து பிரப்சிம்ரன் சிங் 42, ஸ்ரேயாஸ் ஐயர் 82, நேகல் வாதேரா 27, மேக்ஸ்வெல் 3 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில் மார்க்கஸ் ஸ்டோனிஸ் அதிரடியாக விளையாடி 11 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 245 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத் அணி சார்பாக ஹர்ஷல் படேல் அதிகபட்சமாக 4 விக்கெட்களை கைப்பற்றினார். இதனைத் தொடர்ந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கி விளையாடியது.
இத்தொடரில் சொதப்பி வந்த நட்சத்திர கூட்டணி இம்முறை ஜொலித்தது. டிரவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா சிறப்பாக விளையாடினர். இந்த கூட்டணியை பிரிக்க பஞ்சாப் அணி 171 ரன்கள் விட்டுக்கொடுக்க வேண்டி இருந்தது. டிரவிஸ் ஹெட் 66 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் மறுமுனையில் இருந்த அபிஷேக் சர்மா தொடர்ந்து அதிரடியாக விளையாடி சதம் விளாசினார்.
இறுதியில், ஹைதராபாத் அணி 18.3 ஓவர்களில் 247 ரன்கள் எடுத்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அபிஷேக் சர்மா 141 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர் தோல்விகளை சந்தித்து வந்த ஹைதராபாத் அணி தற்போது வெற்றி பெற்றுள்ளது. இது அந்த அணிக்கு இரண்டாவது வெற்றி ஆகும். 6 போட்டிகளில் 2 வெற்றிகளை அந்த அணி பெற்றுள்ளது.
மேலும் படிங்க: மார்க்ரம், பூரன் அதிரடி.. லக்னோ அணிக்கு நான்காவது வெற்றி!
மேலும் படிங்க: சிஎஸ்கே பேட்டர்கள் டெஸ்ட் போட்டிக்கு பயிற்சி பெறுகிறார்களா? விளாசிய முன்னாள் வீரர்!