கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம் பகுதியில் உள்ள அருள்ஞானபுரம் ஆதிதிராவிடர் குடியிருப்பில் கடந்த ஜூலை மாதம் நிறுவப்பட்ட அம்பேத்கர் முழு உருவ வெண்கலச்சிலை மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது.
புதிய சிலை அருகிலேயே திறந்தவெளியில் சிமெண்டால் ஆன அம்பேத்கரின் மார்பளவு சிலையும் உள்ளது. புதிய சிலை பட்டா நிலத்தில் அமைந்துள்ள நிலையில், புறம்போக்கில் இருப்பதாகக் கூறி அதிகாரிகள் கையகப்படுத்த முயல்வதாகவும், இதன் பின்னணியில் அரசியல் உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இது பற்றி நம்மிடம் பேசிய தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்க தலைவரான அருள்ஞானபுரத்தைச் சேர்ந்த வை.தினகரன், “நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு 43 ஆண்டுகளாக இருந்த அம்பேத்கர் மார்பளவு சிமெண்ட் சிலையை மாற்றி புதிய முழு உருவ வெண்கலச் சிலையை அமைக்க 1999-ம் ஆண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அந்த சமயத்தில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நானும், எங்கள் பகுதி மக்களும் இணைந்து ஏற்கனவே இருந்த அம்பேத்கர் மார்பளவு சிலையை எடுத்து இறைச்சகுளம் அருள்ஞானபுரம் ஆதிதிராவிடர் காலணியில் 2002-ல் நிறுவினோம்.

23 ஆண்டுகளாகத் திறந்தவெளியில் இருக்கும் அந்த சிலையால் எந்த சட்டம் ஒழுங்கு பிரச்னையும் ஏற்பட்டதில்லை. இந்த நிலையில் மார்பளவு சிலை பழயதாகிவிட்டதால் அதை மாற்றிவிட்டு அம்பேத்கரின் புதிய முழு உருவச்சிலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் முடிவெடுத்தார்கள்.
அதற்காக மைலாடி பகுதியில் சிற்பிகள் மூலம் 1.19 லட்சம் ரூபாய் செலவில் 6 அடி உயரத்தில் முழு உருவக் கற்சிலை செதுக்கப்பட்டது.
கற்சிலையை நிறுவ 2014-ல் அரசிடம் அனுமதி கேட்கப்பட்டது. சிறிய சுத்தியலால் எளிதில் சேதப்படுத்திவிடமுடியும் என்பதால் கற்சிலை அமைக்க அரசாணை இல்லை எனவும், வெண்கலச்சிலைதான் அமைக்க முடியும் என்றனர்.
எனவே, 20 லட்சம் ரூபாய் செலவில் தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் வெண்கலச்சிலை உருவாக்கினோம்.
அன்றைய கலெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட அதிகாரிகள் அனுமதியின் அடிப்படையில் புஷ்பம் என்பவருக்குச் சொந்தமான பட்டா நிலத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 8-ம் தேதி அம்பேத்கர் வெண்கலச்சிலையை நிறுவியதுடன், அரசு விதிமுறைப்படி கம்பி வேலி உள்ளிட்டவை அமைத்துள்ளோம்.
ஜூலை மாதம் 20-ம் தேதிவாக்கில் அன்றைய கலெக்டர் ஸ்ரீதர் இடம் மாற்றப்பட்டு புதிய கலெக்டராக அழகுமீனா பொறுப்பேற்றார்.
இதற்கிடையே, அம்பேத்கர் சிலை திறக்கும் விவகாரத்தில் மாவட்ட கலெக்டர் முடிவெடுக்கலாம் எனக் கடந்த அக்டோபர் மாதம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மைச் செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.
எனவே கலெக்டர் அழகுமீனாவிடம் சிலையைத் திறக்க அனுமதி கேட்டோம். கலெக்டர் நேரில் வந்து சிலையைப் பார்வையிட்டார்.
கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் கன்னியாகுமரியில் கண்ணாடி பாலத்தைத் திறக்க வந்த முதல்வர் ஸ்டாலின், அம்பேத்கர் சிலையையும் திறக்க உள்ளதாக அதிகாரிகள் மூன்று நாட்களுக்கு முன் எங்களிடம் கூறினர்.
முதல்வர் சிலையைத் திறப்பது எங்களுக்கு மகிழ்ச்சிதான். அதே சமயம், நாங்கள் நிறுவிய சிலை என்பதால் அனைத்து கட்சியினரையும், அப்பகுதியின் முக்கியஸ்தர்களையும் அழைத்து விழாவை நடத்தவேண்டும்.
அதற்குக் கால அவகாசம் வேண்டும் என அதிகாரிகளிடம் கூறி அந்த சமயத்தில் திறப்புவிழா நடத்த மறுத்துவிட்டோம். இதையடுத்தே சிலையைத் திறக்க விடாமலும், சிலையைக் கையகப்படுத்தும் வகையிலும் அதிகாரிகள் நெருக்கடி கொடுக்கிறார்கள்.

இது பற்றி அறிக்கைவிட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை நாங்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தினோம். அ.தி.மு.க பொதுச்செயலாளரை வைத்து சிலையைத் திறக்க நாங்கள் முயல்வதாகத் தவறாகப் புரிந்துகொண்ட அதிகாரிகள் இப்போது சிலை அரசு புறம்போக்கில் இருப்பதாகக் கூறி கையகப்படுத்த முயல்கின்றனர்.
அதற்காக போலீஸ் எஸ்.பி, வருவாய்க் கோட்டாட்சியர் மற்றும் ஊராட்சிகள் உதவி இயக்குநர் ஆகியோருக்கு கலெக்டர் கடிதம் அனுப்பியுள்ளார்.
நாங்கள் பட்டா பூமியில் அமைத்துள்ள அம்பேத்கர் சிலையை எங்கள் விருப்பப்படி திறக்கவிடாமல் செய்வது ஜனநாயகத்துக்கு எதிரானது. இதை நவீன தீண்டாமையாகப் பார்க்கிறோம்” என்றார்.
இந்த விவகாரம் சம்பந்தமாக வரும் 14-ம் தேதி நாகர்கோவில் அம்பேத்கர் சிலை முன்பு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதாகத் தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் அறிவித்திருந்தது.
இது சம்பந்தமாகக் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா-விடம் பேசினோம், “அந்த இடம் சம்பந்தமான விவகாரம் நீண்ட நாட்களாக உள்ளது. நிலம் யாரிடம் வழங்கப்படும் என்பதை போலீஸும், தாசில்தாரும் முடிவு செய்வார்கள்.
இது சம்பந்தமாக ஆர்.டி.ஓ, தாசில்தார் அளவில் பேசியிருப்பார்கள். சிலைக்காக அவர்கள் போராட்டம் பண்ணினால் பார்த்துக்கொள்ளலாம்.
இதில் தேவையில்லாமல் நீங்கள் பிரச்னையை உருவாக்குகிறீர்களா? அந்த இடம் அவங்க இடமாக இருந்தால் அவர்களிடம் கொடுப்போம். அரசு இடமாக இருந்தால் அரசிடம் கொடுப்போம்” என ஆவேசமாகப் பேசினார்.
முதல்வர் மூலம் திறப்புவிழா நடத்துவது பற்றி கலெக்டர் பேசியதாகக் கூறுவது கற்பனையானது எனவும் கலெக்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தினர் அம்பேத்கர் சிலையைத் திறந்துகொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் அழகுமீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது பற்றி நம்மிடம் பேசிய தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்க தலைவர் வை.தினகரன், “எங்கள் இயக்க பொருளாளர் அருளானந்தத்தை நேற்று மாலை கலெக்டர் அலுவலகத்துக்கு அழைத்து சிலையை நாங்களே திறந்துகொள்ளலாம் என கலெக்டர் ஆர்டர் கொடுத்துள்ளனர்.
அந்த ஆர்டரில் 09.04.2025 எனத் தேதியிடப்பட்டுள்ளது. அவர்கள் இப்போது கொடுத்த கடிதத்தில் புறம்போக்கு என எங்குமே குறிப்பிடவில்லை.
பத்திரிகை விளக்கம் கேட்டதாக கலெக்டர் தரப்பில் கூறப்பட்டது. மேலும் இந்த விவகாரத்தைப் பெரிதுபடுத்தவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டனர். ஜூ.வி-யால்தான் இந்த விவகாரத்தில் தீர்வு ஏற்பட்டுள்ளது” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY