''அரசியலுக்காக கலவரத்தை தூண்டாதீர்கள்'' – வக்பு சட்ட எதிர்ப்பு போராட்டத்துக்கு மம்தா கண்டனம்

கொல்கத்தா: வக்பு சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்கத்தில் வன்முறைச் சம்பவங்கள் நடந்தை அடுத்து, அனைவரும் அமைதி காக்குமாறு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், அனைத்து மதத்தினருக்கும் எனது மனமார்ந்த வேண்டுகோள், தயவுசெய்து அமைதியாகவும் நிதானமாகவும் இருங்கள். மதத்தின் பெயரால் எந்த மதச்சார்பற்ற நடத்தையிலும் ஈடுபடாதீர்கள்.

ஒவ்வொரு மனித உயிரும் விலைமதிப்பற்றது, அரசியலுக்காக கலவரங்களைத் தூண்டிவிடாதீர்கள். கலவரம் செய்பவர்கள் சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கிறார்கள்.

வக்பு சட்டத்தை நாங்கள் உருவாக்கவில்லை. இந்தச் சட்டத்தை மத்திய அரசு இயற்றியது. எனவே, போராட்டத்தில் ஈடுபடுபவர்கள், தாங்கள் விரும்பும் பதிலை மத்திய அரசிடமிருந்துதான் பெற வேண்டும்.

இந்த விஷயத்தில் எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம் – இந்த சட்டத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை. இந்தச் சட்டம் நமது மாநிலத்தில் செயல்படுத்தப்படாது. அப்படி இருக்க, இந்தக் கலவரம் எதற்கானது?

கலவரத்தைத் தூண்டுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்போம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். நாங்கள் எந்த வன்முறைச் செயலையும் மன்னிப்பதில்லை.

சில அரசியல் கட்சிகள், அரசியல் ஆதாயத்திற்காக மதத்தை தவறாகப் பயன்படுத்த முயற்சிக்கின்றன. அவர்களின் வற்புறுத்தலுக்கு அடிபணியாதீர்கள்.

மதம் என்றால் மனிதநேயம், கருணை, நாகரிகம் மற்றும் நல்லிணக்கம் என்றே நான் நினைக்கிறேன். அனைவரும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணட்டும் – இதுவே எனது வேண்டுகோள் என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத்தில் வக்பு சட்டத்துக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்டதாக 110-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.