Chennai Super Kings Playing XI Prediction: நடப்பு ஐபிஎல் தொடர் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் வெற்றி கணக்கை தொடங்கியிருந்தாலும், டெல்லி அணி மட்டுமே வீழ்த்த முடியாத அணியாக வலம் வந்து கொண்டிருக்கிறது. டெல்லி மட்டுமின்றி குஜராத், ஆர்சிபி, பஞ்சாப் போன்ற அணிகளும் பலமாக இருக்கின்றன.
IPL 2025: மோசமாக விளையாடும் 3 அணிகள்
இந்தச் சூழலில், ஐபிஎல் தொடரின் ‘ஆதிக்கவாதிகளாக’ அறியப்படும் மும்பை இந்தியன்ஸ் அணி 8வது இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9வது இடத்திலும் உள்ளன. கடந்தாண்டு 2ம் இடம்பிடித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடைசி இடத்தில் இருக்கிறது. இந்த மூன்று அணிகளும் தனித்துவமான வழிகளில் பலம் வாய்ந்த அணிகளாக இருந்தாலும், களத்தில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதே புள்ளிப்பட்டியலின் கடைசியில் இருக்கிறார்கள்.
Chennai Super Kings: மிக மிக மோசமாக விளையாடும் சிஎஸ்கே
அதிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் மோசமான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது. சிஎஸ்கே அணி சேப்பாக்கத்தில் முதல்முறையாக 3 போட்டிகளில் தொடர்ச்சியாக தோற்றிருக்கிறது, ஐபிஎல் வரலாற்றிலும் சிஎஸ்கே அணி முதல்முறையாக 5 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியை பதிவு செய்திருக்கிறது. சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணியின் குறைந்த ஸ்கோரும் நேற்றுதான் பதிவு செய்யப்பட்டிருந்தது. இத்தனை மோசமான சாதனைகளை சிஎஸ்கே அணி ஒவ்வொரு போட்டியிலும் படைத்து வருகிறது.
Chennai Super Kings: சிஎஸ்கே மொத்தமாக மாற வேண்டும்
நடப்பு தொடரில் சிஎஸ்கே அணிக்கு இன்னும் 8 போட்டிகளே மிச்சம் உள்ளது. இந்த 8 போட்டிகளில் சிஎஸ்கே குறைந்தது 7 போட்டிகளிலாவது வெற்றி பெற்றாக வேண்டும். தோனி நேற்று டாஸில் கூறியது போல் இனி ஒவ்வொரு போட்டியும் முக்கியமானதாகும். சிஎஸ்கே இனி வந்தால் மலை போனால்… என்ற ரீதியில்தான் விளையாட வேண்டும். அதுவும் சேப்பாக்கத்தில் 3 போட்டிகளே உள்ளன. இந்த சூழலில் சிஎஸ்கே அணி மொத்தமாக மாற்றம் அடைய வேண்டும்.
Chennai Super Kings: ஓபனர்கள் இவர்கள் தான்
ருதுராஜ் கெய்க்வாட் இல்லாத சூழலில் டெவான் கான்வே – ரச்சின் ரவீந்திரா ஜோடியை தான் ஓபனிங்கில் நம்பியாக வேண்டும். அவர் சிக்ஸர் அடிக்காவிட்டாலும் பல பவுண்டரிகளை அடிக்கும் திறன்கொண்ட Authentic பேட்டர்கள் என தோனி கூறிவிட்டார். எனவே அடுத்த 8 போட்டிகளிலும் இவர்தான் ஓப்பனிங் எனும்பட்சத்தில் நம்பர் 3 ஸ்பாட்டில் இளம் வீரர் ஒருவரை நம்பி களமிறக்க வேண்டும்.
Chennai Super Kings: நம்பர் 3இல் ஷேக் ரஷீத்
சையத் முஸ்தாக் அலி தொடரில் ஆந்திரா அணிக்காக ஷேக் ரஷீத் நம்பர் 3 ஸ்பாட்டில்தான் விளையாடி வந்தார். சையத் முஸ்தாக் அலி தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 1 சதம், 1 அரைசதம் உள்பட 240 ரன்களை அவர் அடித்திருக்கிறார். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இவரை நம்பர் 3இல் களமிறக்கி முயற்சித்து பார்க்கலாம். இவரை பார்ட் டைம் பௌலராக கூட தோனி ஓரிரு ஓவர்களுக்கு பயன்படுத்தலாம். லெக் பிரேக் பந்துவீச்சாளர் ஆவார். 20 வயது ஆவதால் இவருக்கு பெரிய அனுபவம் இருக்காது என்றாலும் இவரை முயற்சித்து பார்ப்பதில் தவறேதும் இல்லை.
Chennai Super Kings: வன்ஷ் பேடிக்கு கண்டிப்பாக வாய்ப்பு வேணும்
ஷிவம் தூபே, விஜய் சங்கர் அடுத்தடுத்து இறங்குவார்கள் அந்த வகையில் நம்பர் 6 இல் வன்ஷ் பேடிக்கு தோனி வாய்ப்பளிக்க வேண்டும். டெல்லி பிரீமியர் லீக்கில் மிடில் ஆர்டரில் விளையாடி பெரிய ஷாட்களை அடிக்கும் திறன் கொண்டவராக அறியப்படுகிறார். ஸ்பின் மட்டுமின்றி வேகப்பந்துவீச்சுக்கு எதிராகவும் கூட வன்ஷ் பேடியின் புள்ளிவிவரங்கள் சிறப்பாகவே இருக்கிறது. எனவே, வன்ஷ் பேடியை நம்பர் 6இல் கொண்டுவர வேண்டும்.
Chennai Super Kings: அஸ்வின் வேண்டவே வேண்டாம்
அஸ்வினை கண்டிப்பாக அடுத்த போட்டியில் நீக்கியாக வேண்டும். அவர் ஒரு சுழற்பந்துவீச்சாளராகவே அணியில் இருக்கிறார், அவர் முழுமையான ஆல்-ரவுண்டர் ஆப்ஷனும் இல்லை. ஜடேஜாவும் தற்போது அப்படிதான் இருக்கிறார். அஸ்வினின் பவர்பிளே பந்துவீச்சும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. அதன்பின்னரும் அவர் விக்கெட் எடுக்க முடியாமல் திணறி வருகிறார். ஜடேஜா மற்றும் நூர் அணியில் இருக்கும்போது அவர் அணிக்கு தேவையில்லை. ரச்சின் ரவீந்திரா கூட 3வது ஸ்பின்னராக விளையாடலாம்.
Chennai Super Kings: தோனி பேட்டிங் ஆர்டர் இதுதான்…
தோனி நம்பர் 6 இல்லை நம்பர் 7இல் வரலாம். ஜடேஜா நம்பர் 8இல் வர வேண்டும். அன்ஷூல் கம்போஜ் பேட்டிங்கிலும் கைக்கொடுப்பார் அவர் நம்பர் 9இல் வரலாம். நூர் அகமது, கலீல் அமகது, பதிரானா பந்துவீச்சில் இருப்பார்கள். ஏற்கெனவே 24 வீரர்களில் 18 வீரர்களை சிஎஸ்கே பயன்படுத்திவிட்டது. அடுத்த போட்டியில் 2 இளம் வீரர்களையும் பயன்படுத்திப் பார்ப்பதில் தவறேதும் இல்லை. அஸ்வினை போன்று ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா இருவரையும் பிளேயிங் லெவனில் சேர்ப்பது மாபெரும் தவறு. அவர்கள் மிக மோசமான பார்மில் இருப்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது.
CSK: சிஎஸ்கேவின் பிளேயிங் லெவன் கணிப்பு
டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, ஷேக் ரஷீத், ஷிவம் தூபே, விஜய் சங்கர், வன்ஷ் பேடி, எம்எஸ் தோனி, ஜடேஜா, அன்ஷூல் கம்போஜ், நூர் அமகது, கலீல் அமகது. இம்பாக்ட் வீரர்: பதிரானா.